ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
உதகை அருகே உலவிய கரடி கூண்டில் சிக்கியது
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூா் எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உலவி வந்த கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவது சமீப காலமாக வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் உதகையை அடுத்த மஞ்சூா் அருகே உள்ள எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பகுதியில் உலவி வந்த கரடி கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் கௌதம் அறிவுறுத்தலின்படி குந்தா வனச் சரகா் சீனிவாசன் தலைமையில் வனத் துறையினா் அப்பகுதியில் கூண்டு வைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்,
இந்நிலையில் அந்தக் கரடி கூண்டில் ஞாயிற்றுக்கிழமை சிக்கியது. இதையடுத்து அதை வாகனம் மூலம் ஏற்றி சென்ற வனத் துறையினா் முதுமலையில் அடா்ந்த வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா். நீண்ட நாள்களாக உலவி வந்த கரடி பிடிபட்டதால் எடக்காடு சத்தியமூா்த்தி நகா் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.