Chennai Rains : சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - ஸ்பாட் விசிட் புகைப்படங்கள்...
`எனக்கு சரியாக இந்தி தெரியாது; தமிழ்நாட்டில் இது பெரிய பிரச்னை’ - நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி சட்ட திருத்த மசோதா பற்றி இந்தியில் பேசும்போது, 'இந்தி தெரியாமல் இந்தியில் தவறாக பேசுகிறார் அவர்' என்ற எதிர்க்கட்சி பக்கம் இருந்து குரல்கள் எழுந்தது.
உங்கள் பக்கத்தில்...
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "நான் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களின் மாநிலத்தில் (தமிழ்நாடு) இருந்து வருகிறேன். அங்கே இந்தி படிப்பதே பெரிய பிரச்னை. நான் சின்ன வயதில் இந்தி படித்தப்போது கிண்டல் செய்யப்பட்டேன். அதனால், என்னுடைய இந்தியை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். உங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் நண்பர்களின் இந்தி விரோதத்தை பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள்" என்று கூறி, மீண்டும் மசோதா பற்றி பேசப்போகும்போது அவரின் இந்தி பிழை எதிர்க்கட்சி தலைவர் ஒருவரால் திருத்தப்பட்டது.
'அதற்கு' வரவேற்பு!
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "என்னுடைய இந்தியை திருத்தியதற்கு சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள். ஆனால், தமிழ்நாட்டில் எங்களை இந்தி படிக்கவிடாததற்கு அவர்கள் மேல் புகார் அளியுங்கள். 'நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல... இந்தி திணிப்பிற்கு தான்' என்று அவர்கள் கூறுவதை வரவேற்கிறேன். யாரும் யார் மேலேயும் எதுவும் திணிக்கக்கூடாது. அதனால் தான், பிரதமர் ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் மாநில மொழியை பின்பற்ற ஊக்கமளிக்கிறார்.
`நாட்டிலேயே ஒரே பிரதமர்...’
மேலும் உயர் படிப்புகள் மாநிலத்தின் சொந்த மொழியில் இருக்க வேண்டும் என்று நாட்டிலேயே கூறிய ஒரே பிரதமர், மோடி தான். அதனால் தான், இப்போது மருத்துவப் படிப்பை கூட தமிழ்நாட்டில் தமிழில் படிக்க முடிகிறது என்பதை கூற பெருமைப்படுகிறேன்.
நான் சின்ன வயதில் இந்தி கற்க சென்றப்போது, "தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழ்நாட்டின் உப்பை தின்றுவிட்டு வட நாட்டு மொழியான இந்தியை படிக்க போகிறாயா?" என்று கேள்விகளால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டு உள்ளேன். இந்த நிலை அங்குள்ள அரசியல் பின்புலத்தால் தான்.
வந்தேரி மொழி
தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் வந்தேரி மொழிகளாக கருதப்படுகிறது. தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. அப்போது நான் இந்தி படிப்பதில் என்ன தவறு? இப்படி அவர்கள் கூறுவது திணிப்பு இல்லையா? இந்தி படிப்பதில் எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
என் பல பேச்சுகளில் புறநானுறு, திருக்குறள் ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறேன். அந்தளவுக்கு எனக்கு தமிழ் மீது பற்று இருக்கிறது. எனக்கு மற்ற மொழிகளை விட, தமிழ் மீது அதிக பற்று உள்ளது
சென்னையில் இந்தி பிரசார சபா எரிக்கப்பட்டது. யார் அதை எரித்தது? நீங்கள் எனக்கு பிடித்த மொழியை படிப்பதற்கான அடிப்படை உரிமையை பறித்தீர்கள். அதுவும் திணிப்பு தானே.
பிரதமர் மோடி ஐ.நா சபையில் தமிழை மேற்கோள் காட்டினார். அந்தளவுக்கு பிரதமருக்கு தமிழ் மீது மரியாதை உண்டு. திமுக கூட்டணியில் இருக்கும் எந்த பிரதமர் தமிழை மேற்கோள் காட்டினார்கள் என்பதை கூறுங்கள்" என்று பேசினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...