``என் பொண்ணு போட்டிருந்த டிரஸ் கலர் தெரியும்; பொணத்தையாச்சும் கண்ணுல காட்டுங்க" - நொறுங்கிய தாய்
திருவண்ணாமலை, தீப மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடுத்தடுத்து 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் சிறுமி உட்பட மேலும் இருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
`பேரிடர் விபத்து ஏற்படப் போகிறது’ என்று வீட்டுக்குள் இருந்த அவர்களுக்கோ, அந்தப் பகுதியில் வாழும் மற்றவர்களுக்கோ முன்கூட்டியே தெரியாது. காரணம், அது `தீப’ மலை. `இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைக்கூட தீப மலையில் மண்சரிவு ஏற்பட்டதில்லை. அதிலும், இப்படியொரு கோர நிகழ்வு ஏற்படும் என்று கனவில்கூட நினைக்கவில்லை’ என பதைபதைப்புடன் விவரிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மண்ணுக்குள் புதைந்த 7 பேரில் ரம்யா என்ற 12 வயது சிறுமியும் ஒருவர். இந்த சிறுமியின் நிலைகுறித்து தாய் மீனாட்சி கூறும்போது, ``எனக்கு மூணு பசங்க. பெரிய பொண்ணுதான் ரம்யா. முகம் சிதைஞ்சிப்போன நிலையிலதான் உடல் கிடைக்கிறதா சொல்றாங்க. என் கண்ணுல காட்டுங்க. என் குழந்தை போட்டுக்கிட்டிருந்த டிரஸ் கலர் எனக்குத் தெரியும். அவள் எப்படியிருந்தாலும் கண்டுபிடிச்சிடுவேன். அவ முகத்தை பார்த்து மூணு நாள் ஆச்சு. அவள் குரலைக் கேட்டு மூணு நாள் ஆச்சு. என் புள்ளை என்னை `அம்மா’னு கூப்பிட்டும் மூணு நாள் ஆச்சு’’ என்று உடைந்துபேசி கதறித் துடிக்கிறார் திருவண்ணாமலை நிலச்சரிவுக்குள் சிக்கிய சிறுமியின் தாய்.