எம்.பி.க்களுக்கு பொறுப்புடைமை அவசியம்: ஜகதீப் தன்கர்
எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான சௌதரி சரண் சிங் விருதுகளை வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விருதுகளை வழங்கி குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் பேசியதாவது:
எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் (எம்.பி.க்கள்) எதற்காக நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டீர்கள் என்று மக்கள் உங்களை யோசிக்க வைப்பார்கள். எந்த ஜனநாயகமும் தழைக்க கருத்துச் சுதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் இணைந்து செல்வது அவசியம்.
கிராமப்புற வளர்ச்சியின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. விவசாயம் வளர்ச்சி அடையாவிட்டால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயராது. கிராமங்கள் வளர்ச்சி அடையாதபட்சத்தில் வளர்ந்த நாடாவது என்ற லட்சியத்தை நாம் கொண்டிருக்க முடியாது.
வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தை எட்ட நாட்டு மக்களின் வருவாய் எட்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். இது மிகப்பெரிய சவாலாகும்.
கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம். விவசாய விளைச்சல் என்பது மிகப்பெரிய சந்தையாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாக விவசாயத் துறைக்கு அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
விவசாயத் துறைக்கு சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு சௌதரி சரண் சிங் விருது வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் நீரஜா சௌதரி, இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங், ஃபிரோஸ் ஹுசைன், பிரீதம் சிங் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, இந்த விருது விழா சனிக்கிழமை தொடங்கியபோது அதில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதானும், ஜெயந்த் சௌதரியும் பங்கேற்றனர்.
அப்போது தர்மேந்திர பிரதான் பேசுகையில் விவசாயிகளின் மேம்பாட்டுக்காக சௌதரி சரண் சிங் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். ஜெயந்த் சௌதரி பேசுகையில் "நரேந்திர மோடி அரசின் கொள்கைகள், சரண் சிங்கின் லட்சியக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றன” என்று புகழ்ந்துரைத்தார்.