எல்லையில் நீடிக்கும் பதற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!
மும்பை: புவிசார் அரசியல் பதற்றம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், இரண்டு நாள் பேரணிக்குப் பிறகு, இன்றைய நிலையற்ற அமர்வில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.
எவ்வாறாயினும், தொடர்ந்து வரும் அந்நிய நிதியால் சந்தையின் வீழ்ச்சி சற்றே கட்டுப்படுத்தப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செகஸ் அதிகபட்சமாக 80,525.61 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 79,879.15 புள்ளிகளாகவும் இருந்த நிலையில், வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 46.14 புள்ளிகள் சரிந்து 80,242.24 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1.75 புள்ளிகள் குறைந்து 24,334.20 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸ் நிறுவனங்களில் பஜாஜ் ஃபின்சர்வ் 5 சதவிகிதமும், பஜாஜ் பைனான்ஸ் 5 சதவிகிதமும் சரிந்தன.
பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் மார்ச் 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 14 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,417 கோடியாக உள்ளதாக தெரிவித்த நிலையில், பஜாஜ் ஃபைனான்ஸ் மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,940 கோடியாக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் மாருதி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயந்து முடிந்தன.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மற்றும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் ஆகியவை சரிந்த நிலையில், டோக்கியோவின் நிக்கேய் 225 மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தன. அதே வேளையில் ஐரோப்பிய சந்தைகளும் உயந்து இருந்தன.
அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயரந்து முடிந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.2,385.61 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.92 சதவிகிதம் குறைந்து 63.66 அமெரிக்க டாலராக உள்ளது.
'மகாராஷ்டிரா தினத்தை' முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவுடனான வா்த்தகம்: 4-ஆவது ஆண்டாக அமெரிக்கா முன்னிலை