எஸ்டிஆர் - 51 படப்பிடிப்பு அப்டேட்!
நடிகர் சிலம்பரசனின் 51-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
ஒருகாலத்தில் படப்பிடிப்புக்கு சரியாக வராதது, உடல் எடை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் இனி நடிகர் சிலம்பரசன் பழைய மாதிரி நடிக்கவே மாட்டார் என ரசிகர்களே நம்பிக்கை இழந்த நிலையில், திடீரென உடல் எடையைக் குறைத்து மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு எனத் தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவை ஆச்சரியப்படுத்தினார்.
தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனுடன் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்தவர் எஸ்டிஆர் - 49, 50, 51 ஆகிய பெரிய பட்ஜெட் படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமானார். இதில், அவரின் 50-வது படத்தை அவரே தயாரிக்கிறார்.
தற்போது, பார்க்கிங் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் 49-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவரின் 51-வது படமாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா நிகழ்வொன்றில் பேசும்போது, “எஸ்டிஆர் - 51 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. படத்தின் கதையே மிக சுவாரஸ்யமானது. எஸ்டிஆரின் ரசிகர்களுக்கு பயங்கர திருப்தியான படமாகவே அமையும். கதாநாயகி உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்குகிறது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து அப்டேட்கள் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சூர்யா - 46 படப்பிடிப்பு துவக்கம்!