ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஏற்காடும் ஒன்று. இங்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் கோடைக் காலத்திற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. ஏற்காட்டிலும் கோடைக்காலத்திற்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ஏற்காட்டில் காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வார விடுமுறையைக் கொண்டாட ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் ஏற்காட்டின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் ஏற்காட்டின் படகு இல்ல ஏரி, அண்ணா பூங்கா போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் நின்று புகைப்படம் எடுத்தும் பனிமூட்டத்தை குடும்பத்துடன் ரசித்தும் மகிழ்ந்தனர்.