மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!
பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த நபர் சுட்டுப்பிடிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் மக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவரை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.
பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்திலுள்ள காகார் பாலத்தின் அருகில் கோல்டி பிரார் எனும் நிழல் உலக தாதாவின் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது, அவர் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹிமாசல்: தீ விபத்தில் சுற்றுலாப் பயணி பலி! 2 பேர் படுகாயம்!
இந்நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் அம்ரித்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த மலிகாட் (எ) மேக்ஸி என்பதும் அவர் நிழல் உலக தாதாவான கோல்டி பிராரின் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், மக்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டதற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கோல்டி பிரார் மற்றும் கோல்டி தில்லோன் ஆகியோரின் பணம் பறிக்கும் கும்பலானது மொஹாலியைச் சேர்ந்த தொழிலதிபரைக் குறிவைத்து அவரிடம் கடந்த ஜனவரி மாதம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
மேலும், கனடா நாட்டைச் சேர்ந்த நிழல் உலக தாதாவான சதிந்தர்ஜித் சிங் (எ) கோல்டி பிரார் என்பவரை இந்திய அரசு தீவிரவாதி என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.