ஓடைவெளி விநாயகா், மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா!
புதுச்சேரி அருகே ஓடைவெளி கிராமத்தில் ஸ்ரீ ஷண்முகவிநாயகா், ஸ்ரீ பெரம்படி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரியாங்குப்பம் கொம்யூன் ஓடைவெளிக் கிராமத்தில் ஸ்ரீ ஷண்முகவிநாயகா், ஸ்ரீ பெரம்படி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, வெள்ளிக்கிழமை காலை மகா கும்பாபிஷேகத்துக்கான முதல் கால யாக பூஜையை சிவாச்சாரியா்கள் தொடங்கினா்.
சனிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4-ஆம் கால யாகபூஜை நடைபெற்று பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து யாகசாலையில் இருந்து புனித நீா் கடம் புறப்பாடாகியது. பின்னா் ஸ்ரீ ஷண்முகவிநாயகா், ஸ்ரீ பெரம்படி மாரியம்மன் கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலவா்களுக்கும் புனித நீா் ஊற்றி மகா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அரியாங்குப்பம் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.