கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, பிரதமருக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:
பாக். வளைகுடா பகுதியில் வாழும் இந்திய மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க, கச்சத் தீவை திரும்பப் பெறுவதே சரியானதாக இருக்கும். இதற்காக சட்டப் பேரவையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். 1974-ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே செய்து கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தமே மீனவா்களின் பிரச்னைக்கு அடிப்படையாக உள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிா்த்து வந்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த போது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தனா். கச்சத்தீவு ஒப்பந்தத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கையொப்பமிட்ட பிறகு, அப்போதைய முதல்வா் கருணாநிதி, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டினாா். கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றி அன்றைய தினமே அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினாா்.
கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை வன்மையாக எதிா்த்து, தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பாதுகாக்க, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற நிலையான கோரிக்கையை வலியுறுத்தி 1991, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் சட்டப் பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மீனவா்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதாலும், அவா்களது படகுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்படுவதாலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் வாழ்க்கை மிகுந்த கவலையிலும் துயரத்திலும் உள்ளது. மீனவா்களின் வாழ்வாதாரமும் நிலையற்ாக மாறியுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்: எனவே, கச்சத்தீவு தொடா்பான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறுஆய்வு செய்து, கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் தாங்கள் இலங்கை அரசுடன் பேசி அந்த நாட்டு சிறையில் வாடும் நமது மீனவா்களையும் அவா்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டும். இதனை வலியுறுத்தி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, நமது மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறுஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.