Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் த...
கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!
ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடல் பரப்பின் மீது கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையம், திறக்கப்பட்ட போது இருந்ததைவிட, 12.5 அடி வரை கடலுக்குள் மூழ்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, அருகிலேயே இரண்டாவது முனையமும் விரிவுபடுத்தப்பட்டது. அதுவும் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், இது விமானப்போக்குவரத்துத் துறைக்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்குக் காரணம், வெறும் பொறியியல் துறையில் ஏற்பட்ட கோளாறு மட்டுமல்ல என்றும், உலக வெப்பமயமாதல் காரணமாக கடலின் நீர்மட்டம் அதிகரிப்பதும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை சவால்களுக்கும் இடையே, இந்த விமான நிலையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது. அதற்கு இணையாக பொறியாளர்களும் விமான நிலையத்தைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்.
கடந்த 1994ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சர்வதேச விமான நிலையம், ஒசாகா மாகாணத்தில் இருந்த இடத் தட்டுப்பாட்டுக்கு மாற்று வழியாகவும், விமான நிலையப் பகுதிகளில் ஏற்படும் இரைச்சலால் அக்கம் பக்கத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
கடலிலிருந்து சுமார் 20 மீட்டருக்கு களிமண் போன்றவற்றைக் கொண்டு அடித்தளம் அமைக்கப்பட்டு அதன் மீது 20 லட்சம் படுக்கைத்தள குழாய்கள் பொருத்தப்பட்டு, 48,000 டெட்ராபாட்ஸ் கொண்டு இவ்விடம் உயரம் கூட்டப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மிக மோசமான சூறாவளி ஜப்பானைத் தாக்கியபோதே, இந்த விமான நிலையம் கடுமையாக சேதமடைந்தது. விமான நிலையம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விமான நிலையத்தில் சுமார் 5,000 பயணிகள் கிட்டத்தட்ட 24 மணி மின்சாரம் இன்றி தவித்தனர். ஜப்பானின் முக்கிய நிலப்பரப்புடன், விமான நிலையத்தை இணைக்கும் பாதையும் சேதமடைந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை ஜப்பான் எதிர்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கன்சாய் விமான நிலையம் எழுப்பியதிலிருந்து கிடைத்தப் பாடத்தைக் கொண்டு, ஜப்பான் பொறியாளர்கள் நகோயா விமான நிலையத்தையும் கடலின் மீது அமைத்து சாதனை படைத்தனர்.