செய்திகள் :

கடல் தாண்டிய சொற்கள்: `அடிமைத்தனத்திலிருந்து மீளுதல்' கறுப்பினப் பெண்களின் குரலாக கவிஞர் மாயா ஏஞ்சலோ

post image

கடல் தாண்டிய சொற்கள் - புதிய தொடர்

இன்பா

உலகின் பல்வேறு நாடுகளில் பிறந்த கவிஞர்கள், பண்பாட்டின் அரசியலை, தத்துவத்தை, வாழ்வியலைத் தம் மொழியில் செதுக்கியிருக்கின்றனர். இப்படியான கவிஞர்கள் மொழிபெயர்ப்பு வாயிலாக உலகின் மூலைமுடுக்கெங்கும் வாசிக்கப்படுகின்றனர். இவர்களின் தாக்கம் உலகத்தை அதிரச்செய்கிறது.

இப்படியான கவிகளில் சிலர் என் வீட்டின் சன்னலைத் திறந்து வெளிச்சமாகவும், காற்றாகவும் நிரம்பினர். கடல் தாண்டி என் வீடு வந்து என் கால்களை நனைத்த அலைகள் அவை. இத்தொடர் உலகக் கவிதை என்ற பேரியக்கத்தின் ஒரு பகுதியைப் பற்றிய எனது புரிதல். உலகலாவிய கவிமனத்தை அறிதலுக்கான எனது தேடல்.

- இன்பா

அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடியது?

மாயா ஏஞ்சலோ

அன்றாட வேலைகளிலிருந்து பெண்கள் தப்பித்துக்கொள்ளவே முடியாதா? புயல் காற்றில் பறக்கத்துடிக்கும் அகத்துடன்,  வீட்டிற்குள்ளே புதைந்துக் கிடக்கும் பெண்களின் தனிமையையும், பின்தங்கிய சமூகங்களிலிருந்து வரும் கறுப்பினப் பெண்கள் எதிர்கொள்ளும் கடினமான வேலைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் மாயா ஏஞ்சலோவின் பெண் பற்றிய கவிதை இது. 

நான் குழந்தைகளைக் 

கவனித்துக் கொள்ள வேண்டும்

துணிகளைச் சரிசெய்ய வேண்டும்

தரையைத் துடைக்க வேண்டும்

உணவு வாங்க வேண்டும்

கோழி பொரிக்க வேண்டும்

குழந்தையின் ஈரத்தை உலர வைக்க வேண்டும்

இணையருக்குச் சமைக்க வேண்டும் 

தோட்டத்தில் களையெடுக்க வேண்டும்

சட்டைகளைத் தேய்க்கவேண்டும்

குழந்தைகளுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்

கரும்பு வெட்ட வேண்டும்

குடிசையைச் சுத்தம் செய்ய வேண்டும்

பிறகு நோயாளியைக் கவனித்துவிட்டு

பஞ்சுகளைப் பொறுக்க வேண்டும்

என் மீசு ஒளி வீசட்டும் சூரியன்

என் மீது பெய்யட்டும் மழை

என் மீது மெல்ல விழட்டும் பனித்துளி

என் புருவங்கள் குளிரட்டும் 

புயலே, இங்கிருந்து வீசுங்கள்

கடுமையாக வீசும் காற்றோடு

என்னை வானத்தில் மிதக்க விடுங்கள்

நான் மீண்டும் ஓய்வெடுக்கும் வரை

மெதுவாக விழும் பனிக்கட்டிகள்

வெண்மையாக என்னை மூடுகின்றன

குளிரும் பனியும் முத்தமிடுகின்றன

நான் இன்றிரவு ஓய்வெடுக்க வேண்டும்.

சூரியன், மழை, வளைந்திருக்கும் வானம்

மலை, சமுத்திரம், இலை, கல்

மின்னும் நட்சத்திரம், ஒளிரும் சந்திரன்

நீங்கள் எல்லோரும் தான்

என் சொந்தமெனச் சொல்லிக்கொள்கிறேன்.

இக்கவிதையை வாசித்தவுடன் எனக்குள் வேறுவிதமான பிறழ்வுகளை எழுப்பிவிட்டது.  பள்ளி விடுமுறை காலங்களில் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் கோலி, கிட்டிப்புல் விளையாட அடுத்தத் தெருவிற்குச் சென்றுவிடுவதுண்டு அல்லது பாலத்தின் கட்டைச் சுவற்றில் ஏறி நின்று ஆற்றில் பல்டியடித்துக் நண்பர்களோடு நீந்தி விளையாடிவிட்டு சாப்பிடும் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதுண்டு. வீட்டில்   வேலை எதையும் செய்ததில்லை. ஆனால் வீட்டிலிருக்கும் ஏதோவொரு பெண் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறாள், அவளே பொறுப்பு என்பது யாரும் கேட்காமலேயே நமக்குள் திணிக்கப்பட்டது. எந்தச் சட்டத்திற்குள்ளும் அடங்காமல் எல்லாக் காலத்துக்கும் பொருந்திவந்த மாய விதி.

வளர்ப்புத் தந்தை அவருக்குச் செய்த கொடுமை இன்றும் முடிவின்றி நாடெங்கும் நடந்துகொண்டு தானிருக்கிறது. நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை எடுத்துச்சொல்லி பெண்ணடிமைத் தனத்தைப் படம்பிடித்துக் காட்டியவர். சமூகக் கடப்பாடுகளைக் களைந்து வெறியேறத்துடிக்கும் மனம் வண்ணத்துப் பூச்சியின் சிறகோடு இடுப்பை வளைத்து காலை ஊன்றி பறந்துசெல்ல நினைக்கிறது.

ஓய்வேயின்றி உழைத்து உழைத்து களைத்துப் போய் வீசும் புயல் காற்றிடம் என்னை வானத்தில் மிதக்க விடுங்களென இறைஞ்சுகிறது. வானிலிருந்து மென் தூறலாக வரும் பனித்துளிகள் வெண்மையாக மூட, முத்தமிடும் பனியிடம் கொஞ்சுகிறது. இன்றிரவாவது ஓய்வெடுக்கவேண்டுமென. வளைந்திருக்கும் வானமும், சூரியனும், மழையும், சமுத்திரமும், கல்லும் மலையும், இலையும் தழையும் தான் மகிழ்ச்சியைத் தருகின்றன. இயற்கையின் பிரமாண்டம் அவளுக்கு இடப்பெயர்வைத் தருகின்றன. அக்காலத்தில் கறுப்பினப் பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள், கிடைத்த வேலையைச் செய்தல் என்ற நிலை இருந்த போதிலும் பெரும்பாலும் வீட்டுப் பணிகளிலேயே அமர்த்தப்பட்டனர். அதிகாரம் மற்றும் சுதந்திரத்தைத் தேடும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தியாகங்களைச் சொல்லும் இக்கவிதை ஒரு கடுமையான சாடலாகவும் இருக்கிறது.

மாயா ஏஞ்சலோ
ஏஞ்சலோ கவிஞர், எழுத்தாளர், இயக்குநர், நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் இருந்தவர். பல்வேறு கவிதைப் புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும் தனது ஏழு சுயசரிதை நூல்களின் மூலமாகப் பலதரப்பட்ட மக்களைச் சென்றடைந்தவர்.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படத்துறையில் கால்பதித்ததோடு தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். ஏஞ்சலோவின் முதல் சுயசரிதைத் தொடர் அவரது குழந்தைப் பருவம் மற்றும் சிறு வயது அனுபவங்களை மையமாகக் கொண்டது. தனது 17 வயது வரையிலான அனுபவங்களைத் தொகுத்து, ‘எனக்குத் தெரியும் ஏன் இந்தக் கூண்டுப் பறவை பாடுகிறதென இளம்பருவ வாழ்வியலை எடுத்துச் சொன்னார். இந்நூல் ஏஞ்சலோவுக்குச் சர்வதேச அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. 

அடிமைத்தனம் மற்றும் சுதந்திரம் பெறும் விருப்பத்தைப் பிரதிபலிக்கப் பறவையைக் குறியீடாகச் சொல்லுகிறார். மீள முடியாத எல்லைக்குச் சென்று வெற்று நிராசைகளோடு கறுப்பினப் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்னைகளையும்,  மனப் போராட்டங்களையும் கருப்பொருளாகக் கொண்ட `கூண்டுக்குள் அடைபட்ட பறவை' என்ற நீள்கவிதை காட்சிப் படிமங்களாக மனத்தில் பதிந்துவிட்டது.

‘பறக்கும் திருடனுக்குள்’ என்ற இந்திரஜித்தின் கதையில் நிகழும் நிசப்தம், அதிலும் பெண் வாசற்படியில் அமர்ந்து, நெளிந்து வளைந்து கஞ்சா புகைப்பவன் எனச் சொல்வதும், நாய்களின் மீது கொஞ்சம் பயங்கொண்ட திருடன் பறந்து பறந்து திருடுகிறவன் இன்னொரு திருடனுக்குத் தப்பித்துச் செல்ல உனக்குத் திறமை போதாதென அறிவுரை சொல்வான். ஏஞ்சலோவின் கவிதைகள் அறிவுரை சொல்லிவிட்டுத் தப்பித்துச் செல்வதில்லை. உழைப்பைச் சுரண்டும் வெள்ளையரின் மீதான காழ்ப்புணர்ச்சியையும் உன்னதமான உணர்வுகளுக்குப் பின்னால் நூதனமாக அடைந்திருக்கும் கீழறுத்தலையும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களின் மறுபக்கங்களையும் கரிசனத்தோடும் கவனத்தோடும் உன்னதப்படுத்துகிறது.

மாயா ஏஞ்சலோ

இளமையில் பல்வேறு வேலைகளைப் பார்த்தவர், பிறகு கவிஞராகவும் எழுத்தாளராகவும் ஆனார். ஆரம்பத்தில் சமையல்காரர், தெரு வண்டிகளின் நடத்துநர், விடுதிப் பணியாளர், பாடகி, நடனக் கலைஞர், பாலியல் தொழிலாளி மற்றும் இரவு விடுதிக் கலைஞர் போன்ற வேலைகளைச் செய்து பின் நடிக்கவும் செய்தார்.

ஏஞ்சலோவின் வாழ்வியலை அதில் புனைந்திருக்கும் கவிதார்த்தமான காட்சிகளுடன் அகக்கவிதைகள் இயங்கு தளத்தைக் குறுக்குவெட்டாகப் பிளந்து பார்த்தால் அதன் ஒருபுறத்தில் எல்லையில்லாக் கற்பனைகளும், மறு எல்லையில் வலியும் வேதனையும் கொட்டிக்கிடப்பது அப்பட்டமாகத் தெரியவருகிறது. அவை வாசக மனத்தில் கனமாகவும் கூர்மையாகவும் இறங்கும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன.

வட கரோலினாவின் உள்ள வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க ஆய்வுகள் தொடர்பான முதல் ரெனால்ட்ஸ் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.   சிவில் உரிமைகள் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். தனது நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் ஏஞ்சலோ தனது தனிப்பட்ட வாழ்வியல் அனுபவங்களைப் பகிரங்கமாகச் சொன்னார். அவரது படைப்புகள் கறுப்பினக் கலாசாரத்தினை எடுத்துச்சொல்வதாகவும் சொல்லப்படுகின்றது. இவரது படைப்புகள் உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பரவலாக வலம் வருகின்றன. ஆனாலும் சில அமெரிக்க நூலகங்களிலிருந்து அவரது நூல்களைத் தடை செய்ய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

 ஏஞ்சலோவின் மிகவும் பிரபலமான படைப்புகள் சுயசரிதை புனைகதைகள். சுயசரிதையின் கட்டமைப்புகளை உடைத்தும், விமர்சித்தும் அதிலிருந்து தன்னை விடுவித்து, சவால்களையும், சமூக வேறுபாடுகளையும், கொடுமைகளையும் முன்வைத்து எழுதினார். அவரது புத்தகங்கள் இனவெறி, அடையாளம், குடும்பப் பிணைப்புகளெனச் சமூகக் கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருந்தன.

மாயா ஏஞ்சலோ

நான் இன்னும் எழுகிறேன்

நீங்கள் என்னை வரலாற்றில் எழுதலாம்

உங்களுடைய கசப்பான

திரிக்கப்பட்ட பொய்களால்

மிகவும் அழுக்கென

என்னை நீங்கள் மிதிக்கக்கூடும்

ஆனால் தூசுபோல்

நான் இன்னும் எழுகிறேன்.

இவ்வரிகள் அவரது நம்பிக்கைகளின் எதிர்பார்ப்பைப் கொண்டு அடக்கு முறைக்கு எதிரான குரலாகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் மீளுருப்படுத்தலும், அவற்றின் மீதான கேள்வியையும் முன் வைக்கிறது. 

ஏன் இப்படியாகத் தோன்றுகிறதென நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கனவில் தெருவைப் பறந்தே கடந்திருக்கிறேன், என் ஊரைத் தாண்டி அடுத்த ஊருக்குப் பறந்து செல்வதைப்போல் கனவு கண்டிருக்கிறேன். அக்கனவை நினைத்து நினைத்து அனுபவித்துக் காற்றில் பறந்து சென்று எங்கெல்லாம் செல்ல மனம் விரும்புகிறதோ அங்கெல்லாம் பறந்திருக்கிறேன்.  

மனக்கோயில் கட்டிய மாசிலார் கதையைக் காசி விசுவநாதர் கோவிலின் ஓதுவார் சொல்ல ரசித்து ருசித்துக் கேட்டபோது கதையோடு சுண்டலும் சர்க்கரைப் பொங்கலும் மனத்துக்குள் சென்றன. மனது வைத்தால் எதையும் செய்ய முடியுமென உணர்ந்துகொண்ட தருணமது. கனவின் வழியாகத் தாஜ்மகாலுக்குக்கூடப் பறந்து சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் நேரங்காலம் போவது தெரியாமல் படுத்தபடியே கனவில் மிதந்து பயணிப்பது எனக்கு இனிமையாக இருந்தது. ஏதோவொரு மன அழுத்தம், அதிலிருந்து மீளத்துடிக்கும் மனம்தான் இப்படியாகத் தன்னை விடுவிக்க நினைத்து பறந்து சென்று கொண்டிருக்கிறது என நண்பர்   சொன்னதை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எதிர்கொள்கின்ற வன்முறையையும், ஆர்ப்பாட்டங்களையும் கவிதையின் குரலாக வெளியில் வருகிறது. சுயத்துக்குள் பொங்கிவரும் கொத்தடிமைத்தனத்தை விடுவித்து எப்படி வெற்றியை அடைய முடியும் என்பதையும் யோசிக்க வைக்கின்ற வரிகளுக்குச் சொந்தக்காரர். நேர்கொண்ட பார்வையுடன் எதற்கும் அஞ்சாத, தைரியமான, சக்திவாய்ந்த குரலுடைய பெண்ணாக மாயா ஏஞ்சலோ எவ்விதச் சவால்களையும் கடந்து வருவதற்கான, பறந்து போவதற்கான சுயவலிமையைப் பெற்றமைக்குக் கறுப்பினச் சமூகத்தின் ஆழ்படிமங்கள் அவள் மனத்தில் உறைந்து கிடந்ததே காரணமாக இருக்கவேண்டும். 

ஏப்ரல் 4, 1928 இல் செயின்ட் லூயிஸில் மார்குரைட் ஜான்சனாகப் பிறந்தார், ஒதுக்குப்புறமான கிராமப்புற ஆர்கன்சாஸில் பிறந்து வளர்ந்து புலிட்சர் பரிசு மற்றும் தேசிய புத்தக விருதுக்கான பரிந்துரைகள் வரை கிடைக்கப்பெற்றார்.

மாயா ஏஞ்சலோ

ஜனாதிபதி பில் கிளிண்டனின் வேண்டுகோளின் பேரில், 1993 ஆம் ஆண்டு முதல் பதவியேற்பு விழாவில் ஏஞ்சலோ தனது "ஆன் தி பல்ஸ் ஆஃப் மார்னிங்" என்ற கவிதையை வாசித்தார். ஜான் எஃப். கென்னடியின் பதவியேற்பு விழாவிலும் கவிதை வாசித்தார். ராபர்ட் ஃப்ரோஸ்டுக்குப் பிறகு அரசமைப்பு நிகழ்வுகளில் தனது கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து நெகிழச் செய்த கவிஞரானார்.

 மாயா ஏஞ்சலோ பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க மொழிகள் பேசத் தெரிந்தவர். அவர் தென்னாப்பிரிக்கச் சுதந்திரப் போராட்ட வீரரை மணந்துகொண்டு கெய்ரோவில் வசித்தார். ஏராளமான கௌரவப் பட்டங்களைப் பெற்று இன்றும் கறுப்பினப் பெண்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார்.


முகமூடியை நாங்கள் அணிகிறோம்

கன்னங்களை மறைத்து, கண்களில் நிழலாடுகிறது

கிழிந்து இரத்தம் சிந்தும் இதயங்களுடன் சிரித்தபடியே

எண்ணற்ற நுணுக்கங்களைக் கொண்ட வாயுடனும்

கடனேயென மனிதத் தந்திரங்களுக்காகச் செய்கிறோம்.

 

நம்முடைய கண்ணீரையும் பெருமூச்சையும் பார்க்க

இவ்வுலகம் ஏன் அதீத ஞானத்துடன் இருக்க வேண்டும்

இல்லை, அவர்கள் நம்மை மட்டுமே பார்க்கட்டும்

நாம் முகமூடியை அணிந்துகொண்டேயிருப்போம்.

முகமூடி கவிதை, கொடூரமான துன்பங்களுக்கு வளைந்து உடைந்து போனாலும் கறுமை நிறம் என்பது துணிச்சலான அகத்தையும், அணிந்திருக்கும் முகமூடி முகத்தில் சிரிப்பையும் பொய்களையும் சித்தரிக்கிறது. அது கன்னத்தில் வழியும் இரத்தத்தை மறைத்துக்கொள்கிறது. அதோடு வெள்ளையர்கள் செய்யும் இழிவுகளுக்கு அடிபணிந்த வாழ்வுக்குக் கறுப்பர்கள் அடிபணிந்திருக்கிறார்கள். இவர்களது முகமூடிக்குள்ளான புன்னகை கிழிந்த, இரத்தம் தோய்ந்த இதயங்களை மறைத்துக்கொள்கிறது.

உலகம் போலியான அனுதாபங்களால் நிறைந்திருக்கிறது அதனாலேயே அதீத ஞானத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறது. சர்க்கஸில் உள்ள கோமாளிகளைப் போல் பார்த்தாலும் கறுப்பினத்தவர்கள் முகமூடி அணிந்து வீட்டில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார். அடிமைத்தனமும் இனவெறியை எதிர்க்கும் கறுப்பர் இனத்தின் உளப்போராட்டங்களோடும் உணர்வுகளோடும் படும் துன்பங்களைப் பேசுபவர்கள் முகத்தில் மூடியணிந்து கண்ணீரையும், வலியையும் துயரங்களையும் மறைத்துக் கொண்டு கோமாளியைப்போல் முகத்தில் புன்னகையைக் காட்டுகிறார்கள்.

இந்நேரத்தில் தங்கச் சிங்கம் விருது பெற்ற ஜாக்குவின் பீனிஸ் நடித்த `ஜோக்கர்' திரைப்படம் நினைவில் வராமல் போனால் துயரம் தான்.

முகமூடி என்பது சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி அணிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. கவிதையில்"மாஸ்க்" நகைக்கிறது பொய் சொல்லுகிறது,  உளச்சோர்வை மறைக்கின்றது. சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்க்கையை நகர்த்துவதற்காக அவர்கள் செய்துள்ள சலுகைகளைக் கடனே என்று அறிவிக்கின்றான். ஆனால் உள்ளம் முழுக்க வஞ்சகம் நிறைந்துள்ளது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் துன்பத்தையும் மறைத்து, மந்தமான மற்றும் மெல்லிய புன்னகைகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று வேதனையுடன் சொல்கிறார்.

 நீங்கள் எவ்வளவு கொடியவர்களாக இருந்தாலும் நாங்கள் மாஸ்க் அணிந்துகொண்டு சிரித்துக்கொள்கிறோம் ஹா… ஹா… ஹா.. என்று நகைத்தபடி இக்கவிதையை ஏஞ்சலோ வாசித்து முடிக்கும்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. இதுபோல் கண்களில் கண்ணீர் தளும்பத் தளும்பக் கவிதை வாசித்து வேறு எவரையும் நான் பார்த்ததில்லை. அழுதபடி முகத்தைத் திருப்பிக் கொண்ட ஏஞ்சலோ அதே கணத்தில் என் மனத்தில் ஏறி அமர்ந்துவிட்டார். இப்படி உச்சபட்ச உணர்வுகளை ஒரு கவிதை கடத்தும்போது அதனால் கடத்தப்படும் நடத்தியலுக்கு மனத்தில் நிரந்தரத் தன்மை கிடைத்துவிடுகிறது.

எங்களது தோல் நிறங்கள்

பன்முகத்தன்மையுடன் குழப்பமும்

மயக்கமும் மகிழ்ச்சியுமாய்

பழுப்பும் இளஞ்சிவப்புமாய்

பழுப்பும் ஊதாவுமாய்

நீலத் தோலும் வெள்ளையுமாய்

 

நான் ஏழு கடல்களில் பயணம் செய்துள்ளேன்

ஒவ்வொரு நிலத்திலும் நின்றிருக்கிறேன்

உலக அதிசயங்களைப் பார்த்திருக்கிறேன்

ஆனால் சாதாரண மனிதர்

ஒருவரைக் கூடக் காணவில்லை.

மாயா ஏஞ்சலோ

உலகின் பல்வேறு இடங்களில் வாழும் மனிதர்கள் தோற்றத்திலும் வாழ்க்கை முறையிலும், உணர்வுகளிலும் வேறுபட்டிருந்தாலும், கலை, பண்பாடுகளின் பிரதானமாக இருக்க வேண்டியது மனிதம் மட்டுமே. அனைவரும் ஒரே விதமாக, ஒரே மனிதர்கள்தாம். ஒரே குடும்பமாக ஒன்றாக இருக்க வேண்டும். நமக்குள் பலவிதமான பிரிவினைகள் இருந்தாலும் உங்களைப் போல் தான் நாங்களும் இருக்கின்றோம். மனிதர்களின் தோற்றங்கள், சரித்திரங்கள், கலாசாரங்கள், மொழிகள், வாழ்க்கை முறைகளென அனைத்திலும் வேறுபாடுகள் உள்ளதென்றாலும், மனிதம் ஒன்றே அத்தனைக்கும் அடிப்படையாக இருக்கிறது. 

`பிரபஞ்சத்தின் பெண்' என்ற இன்னொரு கவிதையும் பெண்களின் வலிமையையும் நம்பிக்கையையும் கொண்டாடுகிறது. கறுப்பினப் பெண்கள் அழகியலுக்கான வரையறைக்குள் இல்லாமலிருக்கலாம், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இதயத்தில் வலிமையானவர்கள். தனது ஆற்றலால் பிரபஞ்சத்திலுள்ள பெண்களைப் போல் தங்களையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். 

மாயா ஏஞ்சலோவின் அகமொழியின் கட்டுமானம் புறவுலகுக்குச் சாத்தியமான கூறுகளை முன்னிறுத்தி கவிதைகளின் வழி உளப்போராட்டம், இன அடையாளம், அகச் சுதந்திரம், பாலினம் மற்றும் சமூக அநீதி போன்ற பிரச்னைகளை முன்வைத்துள்ளார் எனச் சொல்லலாம். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சமூக அச்சுறுத்தல்கள், அதிலும் குறிப்பாகக் கறுப்பினப் பெண்கள் எதிர்கொள்கின்ற அச்சங்களைப் பேசியிருக்கிறார். அவை தீவிர உணர்வுகளைக் கொண்டவை. அடிமைத்தனத்திலிருந்து மீண்டுவருவதற்கான கூட்டு மன நிலையையும், அனுபவங்களையும் பேசுபவை. 

மாயா ஏஞ்சலோ

மாயா ஏஞ்சலோ வட கரோலினாவின் வின்ஸ்டன்-சேலத்தில் உள்ள வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் ரெனால்ட்ஸ் பேராசிரியராக இருந்தார். அவர் மே 28, 2014 அன்று வின்ஸ்டன்-செலத்தில் உள்ள தனது வீட்டில் மறைந்தார்.

தனது கபாலத்திற்குள் புகுந்த சிலந்தி வலையை அறுத்துக்கொண்டு வெளியில்  வந்து தனது வாழ்வியல் பரிமாணங்களைப் பதிவு செய்து தீர்க்கதரிசியாக, உறுதியுடன் தனித்துவம் நிறைந்த பெண்ணாக நிமிர்ந்து நின்ற மாயா ஏஞ்சலோவின் கவிதைகள் குறு நுரை சுமந்து திரியும் நறுமலர்.

- சொற்கள் மிதக்கும்

Vikatan Play Contest : இது ரோலர் கோஸ்டர் பயணம்! | கோட்டைப்புரத்து வீடு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகம் - வாசகர்கள் நன்கொடை அளிக்கலாம்

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. 'ரோஜா ஆர்ட்ஸ்' என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். அந்த ரோஜா முத்தையாவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொள்ள, 'ரோஜா முத்தையா' ஆனார். எல்ல... மேலும் பார்க்க

``மக்களுக்காக மேடையேறும் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்'' - நெகிழ வைத்த திணை நிலவாசிகள்

கலைஞர்களுக்கான உரிய மரியாதையை செலுத்துவது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இதன் பிறகும் கலையை நமக்கு மரியாதை செய்வோர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும். இப்படியான ஒரு விஷயத்தை நிகழ... மேலும் பார்க்க

முத்து காமிக்ஸ்: "சினிமாவில் விருது வாங்கும்போது கூட கிடைக்காத சந்தோஷம் அது" - நெகிழும் பொன்வண்ணன்

கதை சொல்லலில் எத்தனையோ நவீன கலை வடிவங்கள் வந்தாலும் சுவாரஸ்யமும் கற்பனையும் சித்திரமும் செழித்துக்கிடக்கும் ஒரு கலைவடிவம் காமிக்ஸ்.தமிழில் காமிக்ஸ்களை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவரான முத்து காமிக... மேலும் பார்க்க

என் கேள்விக்கென்ன பதில்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க