வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு
`கட்டபொம்மனுக்கு துரோகம் இழைப்பு' - எட்டயபுரம் மன்னர் குறித்து 10-ம் வகுப்பு பாடநூலில் தவறான தகவலா?!
தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என, வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எட்டயபுரம். பாரதி என பட்டம் சூட்டப்பட்டது எட்டயபுரம் சமஸ்தானத்தில்தான். எட்டயபுரத்தில் தற்போது செயல்பட்டுவரும் பேருந்து நிலையம், காவல் நிலையம், காவலர்கள் குடியிருப்பு, அரசு மருத்துவமனை என அனைத்தும் எட்டயபுரம் ராஜாவால் தானமாக அளிக்கப்பட்ட இடங்கள்.

காமராஜர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அரண்மனையில் சமையல் செய்து பள்ளியில் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து எட்டயபுரம் சமஸ்தானத்தின் தற்போதைய ராஜாவான, எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது மன்னரான ராஜ ஜெகவீர முத்து தங்ககுமார ராம வெங்கடேஷ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் சந்திர சைதன்யா ராஜாவிடம் பேசினோம். “கட்டபொம்மன் திரைப்படத்தில் வசனகர்த்தாவான சக்தி கிருஷ்ணசாமி, `கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்பமன்னன்' என எழுதிவிட்டார். வரலாற்று உண்மை தெரியாமல் சிலர் பேசி வருவதால் கடந்த 2 தலைமுறைகளாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம்.

முதலில் சினிமாதானே என்று அலட்சியமாகவிட்டது, பின்னாளில் இவ்வளவு தாக்கம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சிலர் இன்றைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதை இணைத்து பேசும் நிலை உள்ளது. இந்த நிலையில், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் ”பாளைக்காரர்களின் புரட்சி”- “வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம்” என்ற பாடத்தில் ”கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார். பிரிட்டிஷார் அவரது தலைக்கு ஒரு வெகுமதியை நிர்ணயித்தனர். எட்டயபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகம் இழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
இது முற்றிலும் தவறான தகவல். வரலாறு தவறாக கூறப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் பல ஆதாரங்கள் அரசின் ஆவணக் காப்பகத்தில் உள்ளன. அந்த சமயத்தில் என்ன நடந்தது... ஆங்கில அதிகாரிகளுக்கு இடையிலான உரையாடல் எல்லாமே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம் சமஸ்தானத்தின் வரலாற்றினை எடுத்து பார்த்தால் பல விஷயங்கள் உள்ளன. அதை எடுத்து பார்த்தால் உண்மையான வரலாறு தெரியும். இந்தத் தவறான தகவலை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்குமாறு முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனுமில்லை.” என்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக, வரலாறு மற்றும் சுற்றுலாத்துறையின் ஓய்வுபெற்ற பேராசரியரான முனைவர். கருணாகர பாண்டியனிடம் பேசினோம். ``எனது எம்.ஃபில் பட்ட ஆய்வின் தலைப்பு ’எட்டயபுரம் வரலாறு’. சென்னையிலுள்ள அரசு ஆவணக் காப்பகத்திற்கு 2 மாதங்கள் தொடர்ந்து சென்று பல்வேறு தகவல்களை திரட்டினேன். ஓய்வுபெற்ற பிறகு கட்டபொம்மனின் வரலாறு குறித்து களஆய்வு செய்து தனி நூலாக வெளியிடுவதற்காக பாஞ்சாலங்குறிச்சி, கயத்தார், எட்டயபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்றேன்.
அரசு ஆவணங்களிலும், எனது கள ஆய்விலும் நான் தெரிந்து கொண்டது, கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டயபுரம் எட்டப்ப மன்னரோ, புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரோ கிடையாது. மேஜர் பானெர்மென், “தங்களது பாளைய எல்கைக்குள் அந்நிய நடமாட்டம் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும். கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்தால் கோட்டை பீரங்கியால் தகர்க்கப்படும்” என்ற சுற்றறிக்கை வெளியிட... அதன் பேரில் அந்நிய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து ஆங்கிலேயர்களிடம் காவலாளிகள் அளித்த தகவலின்படி கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஈட்டி, கத்தி, வாள், களரி உள்ளிட்ட ஆயுதங்களை திருக்களம்பூர் என்ற ஊரைச் சேர்ந்த முத்துவைரவன் என்பவரின் வாரிசுகள் தற்போதும் பாதுகாத்து பூஜித்து வருகின்றனர்” என்றார். இது குறித்து விளக்கம் கேட்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை பல முறை தொடர்பு கொண்டும், நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவரது உதவியாளர் ராஜாராமையும் தொடர்பு கொண்டோம்.
இருவருக்கும் குறுந்தகவல் அனுப்பியும் பதிலில்லை. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனியை தொடர்பு கொண்டோம். அழைப்பினை ஏற்ற அவரது உதவியாளர், “லியோனி சார், இலங்கைக்கு நிகழ்ச்சிக்காகச் சென்றிருக்கிறார்கள். சென்னை வருவதற்கு 5 நாள்கள் வரை ஆகலாம்" என்றார். அவரிடம் விவரத்தை எடுத்துக் கூறினோம், “சார்.. பாடநூல்களை பிழையின்றி அச்சிட்டு விநியோகம் செய்வது மட்டுமே பாடநூல் கழகத்தின் பொறுப்பு” என்றார்.

பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் சந்திரமோகனை தொடர்பு கொண்டோம், அவர் மீட்டிங்கில் இருப்பதாக அவரின் உதவியாளர் கூறினார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனிடம் பேசினோம், “இது தொடர்பாக மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். இறுதியாக, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதாவை தொடர்பு கொண்டோம், குறுஞ்செய்தி அனுப்பினோம், பதில் இல்லை.
எட்டயபுரம் சமஸ்தானம் குறித்த தவறான தகவல் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துக்கொண்டே இருக்கிறது.