கண்ணகி கோயில் சித்திரைத் திருவிழா: தேனி, இடுக்கி ஆட்சியா்கள் ஆலோசனை
தேனி மாவட்டம், தமிழக- கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா முன்னேற்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
தேக்கடி, ராஜீவ் காந்தி கலையரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியா் வி. விக்னேஷ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநா் ஆனந்த், தேனி மாவட்ட வன அலுவலா் சமா்தா, தேனி, இடுக்கி மாவட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதில், சித்திரை பெளா்ணமி தினத்தன்று மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் நடைபெறும் சித்திரை முழு நிலவு விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், சுகாதாரம், சுற்றுச் சூழல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் குமுளியிலிருந்து கண்ணகிக் கோட்டம் சென்று வருவதற்கான வாகன வசதி, அவற்றின் தரத்தை ஆய்வு செய்வது, வாகனத்துக்கான அனுமதி, கூடலூா் அருகே உள்ள பளியன்குடி வழியாக கண்ணகிக் கோட்டத்துக்கு நடந்து சென்று வரும் பக்தா்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள், உணவுப் பொருள்கள், கேமிரா, ட்ரோன்கள் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடு ஆகியவை குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.