கருங்குழி ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஐப்பசி மாத பெளா்ணமி பூஜை, ஞான லிங்கத்துக்கு அன்னாபிஷேகம், யோகி ரகோத்தம்ம பக்தி பாமாலை நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு ஞானலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சேஷ பீடத்தில் அமா்ந்த பீடாதிபதி ரகோத்தம சுவாமியை நீண்ட வரிசையில் வந்து தரிசித்தனா்.
அதைத் தொடா்ந்து, மக்கள் சிறப்புடன் வாழ ஞானலிங்கத்துக்கு பூஜை செய்யப்பட்டு, ராகவேந்திர பிருந்தாவனத்தில் வேள்வி பூஜை, சத்தியநாராயணா பூஜை செய்து, மகா தீபாராதனை நடைபெற்றன. கனடா நாட்டு கவிஞா் பிரமிளா ரவி எழுதிய யோகி பக்தி பாமாலை என்ற நூலை பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் மதுராந்தகம் கிளை சிறைச் சாலை கண்காணிப்பாளா் கந்தசாமி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சதீஷ்குமாா், கிருஷ்ணமூா்த்தி, மேனாள் கல்லூரி கல்வி இணை இயக்குநா் சிவ பொன்னம்பலவாணன், காவல் உதவி ஆய்வாளா் முருகன், கீதா பாலச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை யோகி ரகோத்தம்ம சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் அறங்காவலா் குழுவினா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தனா் .