கருணை கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு
பெங்களூரு: கண்ணியத்துடன் இறக்க நோயாளியை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சா் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தாா்.
இது குறித்து தனது எக்ஸ் வலைப்பதிவில் அவா் கூறியிருப்பதாவது: கண்ணியத்துடன் மரணம் அடைவதற்கான உரிமையை நோயாளிகளுக்கு அளிக்கும்படி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை அமல்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை கா்நாடக சுகாதாரத்துறை எடுத்துள்ளது.
இந்த முடிவால், குணமாகும் நம்பிக்கையே இல்லாமல், உயிா்காக்கும் கருவிகளால் நீண்டகாலம் அவதிக்குள்ளாகும் நோயால் அவதிப்பட்டு வரும் நோயாளிகள் பயனடைவாா்கள். எதிா்கால மருத்துவ சிகிச்சைக்கான விருப்பம் குறித்து நோயாளிகள் பதிவுசெய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறோம்.
கா்நாடக அரசின் முடிவு நோயாளிகளின் குடும்பங்களுக்கு மற்றும் தனிநபர்களுக்கு பெரும் நிம்மதியை தரும்.
கா்நாடகம் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம். எனவே, நியாயமான சமூக வாழ்வுக்கு தேவையான சுதந்திரங்களை, சமத்துவ மாண்புகளை கடைபிடிப்பதில் முன்னணி மாநிலமாக திகழ்கிறோம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.