Doctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்கும...
கரூர்: 'ஏன் நேரில் வரவில்லை?'- விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்
கரூரில் கடந்த மாதம் 27 -ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். அதன் அடிப்படையில், கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியைச் சேர்ந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் குடும்பத்திற்கு நடிகர் விஜய் 20 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, உயிரிழந்த ராமேஷ் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசும் பொழுது, 'நேரில் உங்களை சந்திப்பேன்' என்று கூறியிருந்த நிலையில், மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் பாதிக்கப்பட்ட மக்களை ஆம்னி பேருந்தில் அழைத்து வரச்சொல்லி சந்தித்தார்.
ஆனால், கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் அவர்களின் குடும்பத்தின் சார்பில் அவரது மனைவி சங்கவி செல்லவில்லை.

அதற்கு பதிலாக இறந்தவரின் அக்கா பூமதி, அவரது கணவர் அர்ஜுனன், உறவினர் பாலு ஆகியோர் சென்னைக்கு சென்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரமேஷின் மனைவி சங்கவி தனக்கு தெரியாமல் அவர்கள் சென்ற காரணத்தினாலும், விஜய் நேரில் வராத காரணத்தினாலும் விஜய் வங்கி கணக்கில் செலுத்திய 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை த.வெ.க தலைவர் விஜய் சென்னை மாமல்லபுரத்துக்கு அழைத்து வரச்சொல்லி சந்தித்து ஆறுதல் சொல்லிய நிலையில், ரமேஷின் மனைவி விஜய் வழங்கிய ரூ. 20 லட்சத்தை திருப்பி அனுப்பியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.















