கைகுலுக்கினால் தேசப்பற்று இல்லாமல் போய்விடுமா? - விளையாட்டில் அரசியலும் சிதையும்...
கரூர் கூட்ட நெரிசல்: "முரணான தகவல்கள், திட்டமிட்டு செய்திருக்கின்றனர்" - பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழக சட்ட மன்றத்தில் இன்று பிறவிவாதங்களை ஒதுக்கி கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டாலும் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பேச முதலமைச்சரை அழைத்தால், இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
'பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம்'
பின்னர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறிய அதிமுகவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் உரையாடிய பழனிசாமி, "தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, பத்து நிமிடத்தில் செருப்பு வந்து விழுந்தது. இதை நான் சட்டமன்றத்தில் பேசினால் நீக்கி விடுவார்கள் என்பதால் ஊடகத்தில் தெரிவிக்கிறேன். செருப்பு விழுந்ததை பற்றி இந்த அரசு எதுவும் கூறவில்லை.
ஸ்டாலின் அரசாங்கத்தால் இந்த கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இவ்வளவு உயிர் பலியை தடுத்திருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி என்ற நிலை தான் இருக்கிறது.
ஸ்டாலின் அரசாங்கம் முழுமையான பாதுகாப்பு கொடுக்காததால் 41 பேர் உயிரிழந்தார்கள் என்று குறிப்பிட்டேன். அதையும் பேரவை குறிப்பிலிருந்து நீக்கி விட்டார்கள் என்றே கருதுகிறேன்.
முரணான தகவல்கள்... எழும் சந்தேகம்
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி இருக்கிறார். எனவே அவரது கூட்டங்களுக்கு எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்பது காவல்துறைக்கு தெரியும், உளவுத்துறைக்கு தெரியும், அரசுக்கு தெரியும். எனவே அவர்கள் கேட்டிருந்த இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். அதை அவர்கள் கொடுக்கவில்லை. அத்துடன் எவ்வளவு மக்கள் வருவார்களோ அதற்கு ஏற்றது போல காவல்துறையினர் நியமிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம். அதையும் செய்ய இந்த அரசு தவறிவிட்டது.

காவல்துறை அதிகாரி ஒரு செய்தி சந்திப்பில் கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் கூட்டத்தில் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறியிருந்தார். ஆனால் அப்படி 500 பேர் அந்த கூட்டத்தில் இல்லை என்பது தெளிவாக எல்லா ஊடகங்கள் வழியாக தெரிகிறது.
ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் ADGP கருத்துக்கு மாறாக 606 காவலர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறியிருக்கிறார். இத்தகைய முரண்பாடுகள் வரும்போதுதான் மக்களுக்கு இதில் சந்தேகம் வருகிறது.
'அசம்பாவிதம் ஏற்பட வேண்டுமென்று திட்டமிட்டு செய்துள்ளனர்'
நாங்கள் 24.01.2025 அன்று எம்ஜிஆர் பிறந்த நாளை விழாவை கொண்டாடுவதற்காக இதே வேலுச்சாமி புரத்தைக் கேட்ட போது, "நீங்கள் கேட்ட வேலுச்சாமிபுரம் அதிக மக்கள் போக்குவரத்து உள்ள பகுதி என்பதாலும் குறுகிய சாலை என்பதாலும் நாங்கள் கொடுக்க மாட்டோம்" என நிராகரித்தனர்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இடத்தை தவெகவுக்கு எப்படி கொடுத்தார்கள்? இது குறுகலான இடம் என அவர்களுக்குத் தெரியும். இந்த கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு தான் இந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே கரூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தினார்கள் முப்பெரும் விழா நடத்தின இடத்தை ஏன் தவெகவுக்குக் கொடுக்கவில்லை.
நிர்வாகத்தில் அடுத்த நாளே அவசர அவசரமாக ஒரு நபர் கமிஷன் வைக்கிறார்கள் அவசர அவசரமாக அன்று இரவு ஒரு மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி பெற்று உடற்கூறாய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
திமுக அரசின் நாடகம்

கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள மூன்று டேபிள்களில் இறந்த 39 பேருக்கும் எப்படி உடற்கூறு ஆய்வு செய்தார்கள். ஒரு உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு குறைந்தது ஒன்றரை மணி நேரம் வேண்டும். என்னென்ன காரணத்திற்காக அவர் இறந்தார் என்பதை அதில்தான் கண்டறிய வேண்டும். அப்படி இருக்கையில் எப்படி 39 பேருக்கு இவ்வளவு வேகமாக உடற்கூறய்வு செய்ய முடிந்தது என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
ஒரு நபர் கமிஷனில் அந்த நீதிபதிக்கு தேவையான உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. நேர்முக உதவியாளரும் இல்லை. அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால் அடுத்த நாளே அவர் வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கிறார், உதவியாளரே இல்லாமல் அதை எல்லாம் யார் பதிவு செய்தார் எதுவும் தெரியாது. ஆக இதையெல்லாம் ஒரு நாடகம் போல திமுக அரசு அரங்கேற்றிருக்கிறது.
அடுத்த நாள் தலைமைச் செயலகத்தில் பொறுப்பு டிஜிபி, சட்ட ஒழுங்கு ஏடிஜிபி, அரசு செய்தி தொடர்பாளர் 3 பேரும் சேர்ந்து ஒரு பேட்டியை கொடுக்கின்றனர். அதில் தவெக தலைவர் இதை செய்திருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாம் என்று ஒரு கருத்தை சொல்லுகின்றனர்.
ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு எந்த தகவலாக இருந்தாலும் ஒரு நபர் கமிஷனிடம்தான் முறையிட வேண்டும். ஆனால் அரசாங்கமே இப்படி அதிகாரிகளை வைத்து பேசும்போது ஒரு நபர் கமிஷன் எப்படி நேர்மையாக செயல்படும். அரசின் கருத்துப்படி தானே அவர்கள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
ஏ டி ஜி பி ஒரு கருத்தை சொல்கிறார். கரூரில் விசாரிக்கும் அதிகாரி அவருக்கு கீழே வேலை செய்கிறார். அவர் எப்படி கரூரில் ஏடிஜிபிக்கு எதிராகவே நேர்மையாக விசாரணை மேற்கொள்ள முடியும். அரசாங்கத்துக்கு இவ்வளவு பதட்டம் ஏன்... இதையெல்லாம் பார்க்கும் போது தான் வேண்டுமென்றே திட்டமிட்டு இதை செய்திருக்கிறார்கள் என்கிற சந்தேகம் வருகிறது." எனப் பேசினார்.