Idli Kadai Movie Review | Dhanush, Nithya Menen, Rajkiran, Arun Vijay | GV Praka...
கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீறல் தீர்மானம்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க மறுத்ததால், அம்மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஹேமமாலின் எம்.பி. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அக்கூட்டணிக் கட்சிகள் அமைத்தன.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு விளக்கமளிக்க கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தொடர்புகொண்ட போது, அவர்கள் மறுத்து விட்டதாகக் கூறி, அவர்கள் இருவர் மீது உரிமைமீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி யாதவ் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், ``மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். பல வழிகளில் அவர்களுக்கு அழைப்பு விடுத்தும் எங்களை சந்திக்க மறுத்து விட்டனர்.
எனவே, எங்கள் குழுவில் இருக்கும் 8 எம்.பி.க்களும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
நாடாளுமன்றக் குழுவைச் சந்திக்க கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் மறுத்ததால், அவர்கள் இருவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர எங்கள் எம்.பி.க்கள் குழு முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.