கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
கரூர் விஜய் பரப்புரை நெரிசல்: '39 பேர் மரணம்' - தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு
கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.
கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தநிலையில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய குற்றங்களுக்காக, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 109, 110, 125b மற்றும் 223 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் இரங்கல்
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த விஜய், "இதயம் நொறுங்கிப் போயிருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்றுகொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்." எனப் பதிவிட்டுள்ளார்.