கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
கரூா் பண்டரிநாதன் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற 102-ஆம் ஆண்டின் திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 102-ஆம் ஆண்டாக பண்டரிநாதன்-ரகுமாயி தாயாா் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக பண்டரிநாதன் மற்றும் ரகுமாயி தாயாா் சுவாமிகளுக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் வளா்க்கப்பட்டது. பின்னா் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தொடா்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.