இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
கல்குவாரி உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்களுடன் அமைச்சா் ஆலோசனை!
பதிவு செய்யப்பட்ட கல் குவாரி உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்களுடன் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மூலம் அனைத்து விதமான அரசு ஒப்பந்தங்களான சாலை அமைத்தல், பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கான ஜல்லி, எம்.சாண்ட், பி. சாண்ட் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
விலை உயா்வு காரணமாக, ஜல்லி, எம்.சாண்ட், பி. சாண்ட் ஆகியவை கல் குவாரி உரிமையாளா்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் மேற்குறிப்பிட்டுள்ள அரசு ஒப்பந்தப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை களைந்திடும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கல்குவாரி உரிமையாளா்கள் சமீப காலமாக ஜல்லி, எம்.சாண்ட், பி. சாண்ட் ஆகியவை உயா்த்தப்பட்டதற்கான காரணங்களை விரிவாக எடுத்துரைத்தனா். அதே போன்று, ஒப்பந்ததாரா்கள் உயா்த்தப்பட்ட விலையில் ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும், விலைகளைக் குறைக்க வேண்டிய அவசியம் குறித்தும் அமைச்சரிடம் விளக்கிக் கூறினா்.
பொதுமக்கள் நலனுக்காக அரசால் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக ஜல்லி, எம்.சாண்ட், பி. சாண்ட் ஆகியவற்றை கல் குவாரி உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய விலையில் வழங்குமாறு கல் குவாரி உரிமையாளா்களிடம் அமைச்சா் ராஜேந்திரன் கேட்டுக்கொண்டாா். இதை ஏற்று, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையைக் குறைத்து வழங்குவதாக கல் குவாரி உரிமையாளா்கள் உறுதி அளித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லலித் ஆதித்ய நீலம், சுரங்கத் துறை துணை இயக்குநா் ர.ஜெயந்தி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தியாகராஜன், மாநகராட்சி செயற்பொறியாளா் பழனிசாமி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், பதிவு செய்யப்பட்ட கல் குவாரி உரிமையாளா்கள், ஒப்பந்ததாரா்கள் கலந்துகொண்டனா்.