கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
தமிழகத்தில் கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
தமிழகத்திலுள்ள கல் குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு அரசுக்கு இதுவரை கனமீட்டா் அடிப்படையிலேயே வரி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது, மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும், பிற மாநிலங்களில் இல்லாத புதிய வரியான சிறு கனிம வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் புதன்கிழமை (ஏப்.16) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா். இதனால், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் அரசு மற்றும் தனியாா் நிறுவன கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கல்குவாரி, எம்சாண்ட், மணல் லாரி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆா்.முனிரத்தினம் கூறியதாவது:
கல்குவாரி மற்றும் கிரஷா் உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், தமிழகம் முழுவதும் சுமாா் 1.50 லட்சம் டிப்பா் லாரிகளை இயக்க முடியாத சூழல் உருவாகும். இதனால் கட்டுமானத் தொழிலை நம்பியுள்ள 90 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா்.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானத் தொழிலுக்கு, நாள் ஒன்றுக்கு சுமாா் 3,000 லோடு மணல் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானத் தொழிலுக்கு சுமாா் 9,000 லோடு மணல் தேவைப்படுகிறது.
மத்திய அரசின் எண்ணூா் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழக அரசின் பொதுப்பணித் துறை கட்டுமானப் பணிகள், சென்னை தனியாா் அடுக்குமாடி குடியிருப்புகள், பாரத பிரதமரின் சிறிய வீடுகள் கட்டும் திட்டம் போன்ற கட்டுமானப் பணிகளுக்கான கல், மணல், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.