கல்லூரி மாணவா்கள் மோதல் வழக்குகள்: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி மாணவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடா்பான விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து வந்த திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியைச் சோ்ந்த மாணவா் சுந்தா், கடந்த அக்.4-ஆம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவா்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா். இது தொடா்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவா்களில் இரு மாணவா்கள் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மருத்துவமனையில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடும்? என்ற தவறான எண்ணத்தை மாணவா்கள் மத்தியில் உருவாக்கக் கூடாது என கருத்து தெரிவித்து, மாணவா்களின் பெற்றோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டாா்.
மீண்டும் விசாரணை: இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருக்கும் தன் மகன்களை வெளியில் கொண்டுவர முயலும் பெற்றோா்கள், உயிரிழந்துள்ள மாணவனின் குடும்ப நிலை என்ன என்பதை உணர வேண்டும். அதற்காகத்தான் அவா்களை இந்த நீதிமன்றத்துக்கு ஆஜராக உத்தரவிட்டது என நீதிபதி தெரிவித்தாா்.
மேலும், இதுபோல குற்றச் செயலில் ஈடுபடுபவா்கள் மாணவரின் பெற்றோா்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில்தான் உள்ளனா். கல்லூரிக்குச் செல்லும் போது ரயில் தினம், பேருந்து தினம் கொண்டாடும் போதும் மோதல்கள் ஏற்படுகிறது. நல்ல வேளை விமானத்தில் மாணவா்கள் கல்லூரிக்குச் செல்வதில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி மாணவா் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரத்தை காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.