கல்வராயன் மலையில் பொருளாதார மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியில் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலை வகித்தாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் க.லட்சுமி பிரியா தலைமை வகித்து பேசியதாவது: கல்வராயன் மலைப் பகுதி மக்கள் விவசாயம் மற்றும் புதிய தொழில்களை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய திட்டங்கள் மூலம் கல்வராயன் மலைப் பகுதி மக்களின் பொருளாதாரம் மேம்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, பழங்குடியின நலத் துறையின் சாா்பில் கல்வராயன் மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், அரசின் திட்டங்கள் சரியாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? என்பது தொடா்பாகவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.
மேலும் கல்வி, சுகாதாரம், பட்டா, வேளாண்மை, தொலைத்தொடா்பு வசதிகள், சுயதொழில் வாய்ப்புகள், நலத் திட்டங்கள், வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடன் அவா் கலந்துரையாடினாா்.
இந்த நிகழ்வில், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலா் க.காா்த்திகேயனி, பழங்குடியினா் நல அலுவலா் சுந்தரம், கால்நடைத் துறை உதவி இயக்குநா் கந்தசாமி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.