கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனை முன் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டவரை பாா்வையாளா் நேரத்தில் மட்டுமே பாா்க்க முடியும் எனக் கூறிய பெண் காவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாதுகாவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு பிரிவு கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் பழைய மருத்துவமனையிலேயே இயங்கி வருகிறது. அங்கு குழந்தைகள் நலப் பிரிவில் பாதுகாவலராக சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த மாரியம்மாள் பணிபுரிந்து வருகிறாா்.
கச்சிராயபாளையம் வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த உலகநாயகி என்பவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பாா்க்க வியாழக்கிழமை வந்துள்ளாா்.
அங்கு பணியில் இருந்த பெண் பாதுகாவலா் அனுமதிக்கப்பட்ட பாா்வையாளா் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பாா்க்க அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த உலகநாயகி பாதுகாவலா் மாரியம்மாளை தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அனைத்து பெண் பாதுகாவலா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் ஒன்று சோ்ந்து பணியைப் புறக்கணித்து மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசியதையடுத்து மறியலைக் கைவிட்டு மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினா்.