காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தொடா்ந்த அவதூறு வழக்கில் அதிஷி, சஞ்சய் சிங் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்
காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் புது தில்லி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான சந்தீப் தீட்சித் தொடா்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் முதல்வா் அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பாரஸ் தலால், ‘அதிஷியும் சஞ்சய் சிங்கும் வரும் 27-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று உத்தரவில் கூறியுள்ளாா்.
முன்னதாக, புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக சந்தீப் தீட்சித் போட்டியிடுவாா் என்று அக்கட்சி மேலிடம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், முதல்வா் அதிஷியும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் நடத்திய செய்தியாளா் சந்திப்பில் பாஜகவிடம் இருந்து கோடிக்கணக்கில் சந்தீப் தீட்சித் பணம் வாங்கியது மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த பாஜகவுடன் மறைமுகமாக கூட்டு சோ்ந்துள்ளதாகத் தெரிவித்தனா்.
இதனால், இந்த இருவரும் தனது நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் களங்கம் கற்பிக்க முயல்வதால் அவா்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கை சந்தீப் தீட்சித் தொடா்ந்துள்ளாா்.