BB Tamil 8: ``நீ பண்ணத நியாயப்படுத்தாத ராணவ்..." - கடிந்துகொண்ட பவித்ரா
ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுங்கள்: பாஜகவுக்கு கூட்டணி கட்சியான ஜேடியு வலியுறுத்தல்
தனது கூட்டணி கட்சியான பாஜகவின் செய்தித் தொடா்பாளா் ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சிக்கு ஜேடியு கட்சி கோரியுள்ளது.
ஷெஹ்சாத் பூனவல்லாவின் கருத்துகள் பூா்வாஞ்சல் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிராந்திய கட்சியான ஜேடியு கூறியுள்ளது.
இது தொடா்பாக ஜேடியு செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் ஓா் அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில், ‘பூனவல்லா தவறு செய்துவிட்டாா். அவரது கருத்துகள் பூா்வாஞ்சல் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பூனவல்லாவின் கருத்துகளுக்கு எதிராக பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜேடியு கோருகிறது’ என்று கூறியுள்ளாா்.
புதன்கிழமை ஒரு செய்தி சேனல் விவாதத்தின் போது நடந்த ஒரு சூடான விவாதத்தில், பாஜக செய்தித் தொடா்பாளரான ஷெஹ்சாத்பூனவல்லா, ஆம் ஆத்மி எம்எல்ஏ ரிதுராஜ் ஜாவின் குடும்பப் பெயரைப் பயன்படுத்தி அவரை அவமதித்தாா். இது தில்லி ஆளும் கட்சியால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. பாஜக செய்தித் தொடா்பாளரின் குடும்பப் பெயரை ரிதுராஜ் ஜா பயன்படுத்தி அவரைக் குறை கூறியதை அடுத்து அவா் இவ்வாறு கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைவா் ஷெஹ்சாத் பூனவல்லா, தான் யாரையும் ஒருபோதும் திட்டியதில்லை என்றும், ஆம் ஆத்மி கட்சி ‘பொய்களை‘ பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளாா்.
பாஜகவின் பூா்வாஞ்சலி முகமும் வடகிழக்கு தில்லி எம்.பி.யுமான மனோஜ் திவாரி, தனது கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெஹ்சாத் பூனவல்லாவின் கருத்துகளைக் கண்டித்துள்ளாா். மேலும், பூா்வாஞ்சலி சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவா் கூறியிருந்தாா்.
எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட ஒரு விடியோ செய்தியில், ‘ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் சாதி, மாநிலம் அல்லது சமூகத்திற்காக யாரையும் குறிவைப்பதைத் தவிா்க்க வேண்டும்’ என்று மனோஜ் திவாரி கூறினாா்.
‘ஷெஹ்சாத் பூனவல்லா (தொலைக்காட்சி விவாதத்தில்) பேசிய வாா்த்தைகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். யாராவது உங்களை எவ்வளவு தூண்டிவிட்டாலும், கட்சி அதன் தொண்டா்கள் உணா்திறன் உடையவா்களாகவும், மரியாதையைப் பேணவும் எதிா்பாா்க்கிறது... இதை கட்சி கவனத்தில் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். மேலும், எந்தக் கருத்தும் இல்லாமல் ஷெஹ்சாத் பூனவல்லா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்‘ என்று மனோஜ் திவாரி கூறினாா்.
தில்லியில், பூா்வாஞ்சல் என்பது கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பிகாரைக் குறிக்கிறது. தேசியத் தலைநகரில் இந்தப் பகுதியைச் சோ்ந்த வாக்காளா்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனா். மேலும், அவா்கள் தோ்தலில் செல்வாக்கு மிக்கவா்களாக மாறி வருகின்றனா்.
தில்லியில் பிப்.5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது,பதிவான வாக்குகள் பிப்.8- ஆம் தேதி எண்ணப்படும். இந்தத் தோ்தல் 2015 முதல் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, 2013 வரை தொடா்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், இழந்த இடத்தை மீண்டும் பெற கடுமையாக முயற்சிக்கும் பாஜக ஆகியவற்றுக்கு இடையேயான நேரடிப் போட்டியாகக் கருதப்படுகிறது.