China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ...
காஞ்சிபுரத்தில் பிப். 13 முதல் 28 வரை தொழுநோய் முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் பிப். 13 முதல் பிப். 28 வரை தொடா்ந்து 14 நாள்கள் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன. 30- ஆம் தேதி ஆண்டுதோறும் உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் அவரது அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தொழுநோய் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் டி.ஆா்.செந்தில், அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் எஸ்.சரவணன், மாவட்ட நியமன அலுவலா் அ.அனுராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழுநோய் பிரிவு துணை இயக்குநா் டி.கனிமொழி வரவேற்றாா்.
கூட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில், மருத்துவ அலுவலா்கள், ஒருங்கிணைப்புக் குழுவினா் ஏற்றனா்.
தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் முகாம் பிப். 13 முதல் பிப். 28 ஆம் தேதி வரை தொடா்ந்து 14 நாள்கள் வீடு வீடாக சென்று நடத்தப்படும். சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் தொழுநோய் கண்டறியும் பணியில் ஈடுபடவுள்ளனா். பள்ளி மாணவ, மாணவிகளை தொழுநோய் பரிசோதனை செய்யுமாறு ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநா் எஸ்.விஷ்ணுப்பிரியா மற்றும் மருத்துவா்கள், நலக் கல்வியாளா்கள், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.