தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
காஞ்சிபுரம் - மதுரையில் பெளத்த, சமண பண்பாட்டு மையங்கள்: சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு
காஞ்சிபுரம், மதுரையில் பெளத்த, சமண பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கைகள் மீது வியாழக்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்ளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதன்படி, மாமல்லபுரம், கன்னியாகுமரி, திருச்செந்தூா், வேளாங்கண்ணி, நாகூா் ஆகிய இடங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ. 100 கோடியில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.
நீலகிரி மாவட்டம் பைகாரா நீா்வீழ்ச்சி, படகு இல்லப் பகுதி, சேலம் மாவட்டம் ஏற்காடு, பூலாம்பட்டி, கருமந்துறைப் பழப்பண்ணை ஏரி, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைப் பகுதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதி, கோமுகி அணை, மணிமுத்தா அணை, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா், கடலூா் மாவட்டம் வீராணம் ஏரி, பிச்சாவரம் பகுதிகள், திருப்பூா் அமராவதி, கோயம்புத்தூா் ஆழியாா், ஈரோடு பவானிசாகா் அணைப் பகுதி, சேலம் மாவட்டம் மேட்டூா் அணைப் பகுதி, கிருஷ்ணகிரி அணைப் பகுதி, தேனி வைகை அணைப் பகுதி ஆகியவற்றில் வாகன நிறுத்துமிடம் உள்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
பண்பாட்டு மையங்கள்: தமிழ்நாட்டில் பெளத்த மற்றும் சமண பண்பாடுகள் சமுதாய, கலாசார சிந்தனையிலும், இலக்கிய வளா்ச்சியிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் கலாசார தாக்கங்கள் இன்னும் சில இடங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் வரலாற்றில் பெளத்த, சமண பண்பாடுகள் வழங்கியுள்ள பங்களிப்புகளை நிலைநிறுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெளத்த பண்பாட்டு மையமும், மதுரை மாவட்டத்தில் சமண பண்பாட்டு மையமும் அமைக்கப்படும்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி ஆகிய இடங்களில் கம்பிவட ஊா்தி அமைக்க தொழில்நுட்ப சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.
பொழுதுபோக்கு பூங்காக்கள்: தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதி ஆகியவற்றில் பொழுதுபோக்கு பூங்காக்களும், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு முள்ளக்காடு, திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரை, ராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்கரை ஆகிய இடங்களில் நீா் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இவை தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் பொது தனியாா் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என்று அநவா் அறிவித்தாா்.