கானாற்றில் வெள்ளப் பெருக்கு
ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தெருக்களிலும், சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்தது. ஆம்பூா் அருகே வனப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை, கம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதி கிராம மக்கள் கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கானாற்று தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத அளவுக்கு தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் கானாற்று தரைப்பாலத்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனா். ஆனால் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை உணராமல் பொதுமக்களில் சிலா் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் கானாற்று தரைப்பாலத்தை கடந்தும் சென்றனா்.
அதேபோல், மிட்டாளம் ஊராட்சியில் உள்ள கானாற்றிலும் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.