I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
காரைக்குடி: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க 3 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின்!
சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரைக்குடி சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்களிப்பில் உருவான நூலகத்தை நேற்று திறந்து வைத்த முதலமைச்சர், மாலையில் காரைக்குடி சாலையில் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்தது கட்சியினரை மகிழ்ச்சிப்படுத்தியது.
மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்பிய முதல்வர் கல்லூரி சாலை, நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம், தேவர் சிலை வழியாக நடந்து சென்றார்.
செல்கின்ற வழியில் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதிக்குள் சென்று அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் வழங்கப்படும் உணவின் தரம், விடுதியிலுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்பு நடந்து சென்றவருக்கு சாலையின் இரு புறங்களிலும் நின்றுகொண்டிருந்த திமுகவினர் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பொது மக்கள் கொடுத்த புத்தகங்களை பெற்றுக் கொண்டவர், அவர்களுக்கு கை கொடுத்தார். பள்ளி மாணவிகள், இளம் பெண்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். வழியில் ஒரு பெரியவர் தூக்கி வைத்திருந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.
காரைக்குடி சாலைகளில் நீண்டதூரம் முதலமைச்சர் நடந்து சென்றது கட்சியினரை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. மறுபக்கம், புதிய பேருந்து நிலையத்துக்கு வருகின்ற அனைத்து சாலைகளையும் காவல்துறையினர் தடை செய்ததால் பல மணி நேரமாக உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.!