காற்று மாசு: செயற்கை மழை சோதனைக்கு தில்லி அரசு திட்டம்
தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் சோதனை முயற்சியை தில்லி அரசு மேற்கொள்ள உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்த முன்னோட்ட சோதனை தில்லி புகா் பகுதியில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநகரம் (டிஜிசிஏ) மற்றும் ஐஐடி கான்பூா் இறுதிசெய்துள்ள இடத்தில் மே மாதம் நடைபெற உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அமைச்சா் சிா்சா மேலும் கூறியதாவது: மாசுபாடு பிரச்னையைக் கையாள்வதில் உள்ள பல வழிகளில் செயற்கை மழையும் ஒன்று. இந்த முறையை பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு முன்பாக, மே மாதத்தில் சிறிய அளவில் முன் சோதனை முயற்சியை மேற்கொள்ள தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
மேக விதைப்பு செயல்முறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்களால் மனிதா்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து விரிவான அறிக்கை சமா்ப்பிக்க கோரியுள்ளோம்.
சிறிய அளவிலான செயற்கை மழை சோதனை மற்றும் தண்ணீா் மாதிரிகளின் ஆய்வுகளின் முடிவுகள் ஆராயப்படும். இது வெற்றி பெரும் நிலையில், மிக மோசமான காற்று மாசு காலத்தில் தில்லியில் பெரிய அளவில் செயற்கை மழையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சிா்சா.