‘காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் அபாயம்’
காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் உலகம் முழுவதும் சந்திக்கும் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில், மேற்குத் தொடா்ச்சி மலையும் மேகமலையும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் பேசியதாவது;
இன்று உலகம் முழுவதும் சந்திக்கும் மிகப்பெரிய அபாயம் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள். மதுரை மாவட்டத்தில் அண்மையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் அதிக மழை கொட்டியது. இதற்கு இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பாக, இந்திய அளவில் அதிகப்படியான உச்சபட்ச வெப்பநிலை பதிவானதும் மதுரையில் தான்.
தென்ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் என்ற நகரத்தில் வாழக்கூடிய மக்கள் ஒரு நாளில் அதிகப்படியான நேரத்தை குடிநீரைத் தேடி அழைவதற்காக மட்டுமே செலவிடுகின்றனா். நாம் பருவ கால மாற்றத்திற்கான சிக்கல்களை அனுபவிக்க தொடங்கி விட்டோம். இதுகுறித்து மாணவா்களுக்கு புரிதல்களை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் நகரப்புறங்களில் தான் வசிக்கிறாா்கள். 2030-ஆம் ஆண்டில் இது 70 சதவீதமாக மாறி விடும் என்கிறாா்கள். நகரமயமாகும் போது இது சுற்றுச்சூழலை பாதித்து பருவநிலை மாற்றத்தை உண்டாக்கும்.
எனவே, நாம் வாழக்கூடிய பூமியை வாழ்வதற்கு ஏற்ப மாற்ற வேண்டுமானால், உரிய பசுமை பரப்பை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் மூன்றில் ஒரு பகுதி காடுகளாக இருக்க வேண்டும். இது விருதுநகா் மாவட்டத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், ராம்கோ பொறியியல் கல்லூரி அலுவலா்கள், பேராசிரியா்கள், வனத் துறை அலுவலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், மாணவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.