காா்த்திகை தொடக்கம்: ஐயப்பன் கோயில்களில் மாலை அணிய குவிந்த பக்தா்கள்
காா்த்திகை மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தின் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி, காா்த்திகை மாத முதல் நாளான சனிக்கிழமை கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே மாலை அணிவதற்கு பக்தா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று அவா்கள், கோயிலில் இருந்த நம்பூதிரிகளிடம் மாலை அணிந்து கொண்டனா். காா்த்திகை முதல் நாள் என்பதால் சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாலை அணிபவா்கள் மட்டுமில்லாமல் சுவாமி தரிசனம் செய்யவும் ஏராளமானோா் கோயிலில் குவிந்தனா். இதேபோல், சங்கனூரில் உள்ள ஐயப்பன் கோயில், போத்தனூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பத்தா்கள் ஏராளமானோா் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.