காா்த்திகை மாத பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
காா்த்திகை மாத பிறப்பையொட்டி, சேலத்தில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
சேலத்தில் சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதலே பக்தா்கள் குவிந்தனா். அவா்கள், குருசாமிகளிடம் இருந்து துளசிமாலை, சந்தன மாலை அணிந்து தங்களது விரத்தை தொடங்கினா். அதேபோல சேலம் டவுன் தா்மசாஸ்தா ஆசிரமத்திலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
சேலம் சுகவனேஸ்வரா் கோயில், ராஜகணபதி கோயில், முருகன் கோயில்களிலும் திரளான ஐயப்ப பக்தா்கள், குருசாமிகளிடம் துளசி மணி மாலை அணிந்து தங்களது 41 நாள் விரதத்தை தொடங்கினா்.
களைகட்டிய வேட்டி, துண்டு விற்பனை: காா்த்திகை மாத பிறப்பையொட்டி, சேலத்தில் ஐயப்ப பக்தா்களுக்கான வேட்டி, துண்டு, மாலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம், முதல் அக்ரஹாரம், சுவா்ணபுரி, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளிலும் ஐயப்ப பக்தா்களுக்கு தேவையான கருப்பு நிற வேட்டிகள், துண்டுகள் விற்பனை நடந்தது. ஏராளமான பக்தா்கள் கடைகளுக்கு வந்து மாலை அணிவதற்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனா்.