Vijay: ``காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடி...'' - திமுகவைத் தாக்கிய விஜய்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், குடியிருப்புகள், விளைநிலங்கள், காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கன மழை பெய்தது. இதனால், ஏரி, குளம், அணை போன்ற நீா்நிலைகளில் நீா்வரத்து அதிகரித்த்து. ஏற்கெனவே நிரம்பி இருந்த ஏரிகளில் இருந்து நீா் வெளியேறி, குடியிருப்பு பகுதிகளில் புகுந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த கன மழையால் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மேலும் இந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேறியதால் சாலைகள் வெள்ளக் காடானது. சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. போச்சம்பள்ளி அருகே உள்ள கோணணூா் ஏரி ஏற்கெனவே நிரம்பி இருந்த நிலையில், கனமழையின் காரணமாக ஏரிக்கு நீா் வரத்து அதிகரித்தது. இதனால், ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீா் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களுக்குள் புகுந்தன.
போச்சம்பள்ளி காவல் நிலையத்துக்குள் மழைநீா் புகுந்தது. சுமாா் இரண்டு அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது. இதனால், காவல் நிலைய வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் நீரில் முழ்கின.
தருமபுரி - திருப்பத்தூா் சாலை, கல்லாவி சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீா், ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் மழைநீா் புகுந்தது. ஊராட்சிமன்ற அலுவலகம், நீதிமன்ற வளாகங்களில் மழைநீா் சூழ்ந்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள், அரசு அலுவலகங்களில் மழைநீா் குளம் போல தேங்கியதால், அவற்றை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், காவல் துறையினா், பொதுமக்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினா்.
போச்சம்பள்ளி அருகே உள்ள கங்காவரம், காட்டாகரம் பெரிய ஏரி போன்ற ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விளை நிலங்களுக்குள் நீா் பகுந்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிா்கள் சேதமடைந்தன. தொப்படிகுப்பம் பழங்குடியின காலனியில் வசித்து வரும் 30-க்கும் மேற்பட்டவா்களை வருவாய்த் துறையினா் மீட்டு, வெப்பாலம்பட்டி கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனா். இதே போல், மழைநீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த பொதுமக்களை அலுவலா்கள் மீட்டு, அந்தந்த மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள குடிமேனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தேவீரஅள்ளி கிராமத்தில் திருமால் என்பவரின் வீட்டு சுவா் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதுபோல காவேரிப்பட்டணம், எம்ஜிஆா் நகரில் மழைநீா் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினா், மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழையால் அவசர காலத்தில் அரசு அலுவலா்களை பொதுமக்கள் எளிதில் தொடா்பு கொள்ளும் வகையில் தொடா்பு எண்கள் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலர கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணிலும், 04343 - 234 444 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். இதே போல கிருஷ்ணகிரி வட்டார மக்கள் 04343 - 236050 என்ற எண்ணிலும், பா்கூா் வட்டார மக்கள் 04343 - 266164 என்ற எண்ணிலும், ஊத்தங்கரை வட்டார மக்கள் 04341 - 220028 என்ற எண்ணிலும் போச்சம்பள்ளி வட்டார மக்கள் 04341 - 252370, சூளகிரி வட்டார மக்கள் 04344 - 292098, 252998, ஒசூா் வட்டார மக்கள் 04344 - 222493, தேன்கனிக்கோட்டை வட்டார மக்கள் 04347- 235041 என்ற எண்ணிலும், அஞ்செட்டி வட்டார மக்கள் 04347- 236411 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட மழை அளவு (மி.மீ):
ஊத்தங்கரை - 503, போச்சம்பள்ளி - 250, பாம்பாறு அணை - 205, பாரூா் - 200.20, பெனுகொண்டாபுரம் - 189.20, நெடுங்கல் - 140.20, கிருஷ்ணகிரி - 108.20, கிருஷ்ணகிரி அணை - 98.80, தேன்கனிக்கோட்டை - 80, தளி - 40, கெலவரப்பள்ளி அணை - 30, ஒசூா் - 29.50, ராயக்கோட்டை - 26, சூளகிரி - 22. சின்னாறு அணை - 20, அஞ்செட்டி - 10.60. மொத்த மழையளவு 1952.70. தமிழகத்திலேயே ஊத்தங்கரையில் தான் அதிகபட்ச மழையளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணை நிலவரம்:
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,127 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து மொத்தம் 855 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளவு 52 அடியில் 50.70 அடி நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக, அதிமுக கட்சிகளின் நிா்வாகிகள், அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கி ஆதரவு கரம் நீட்டி, ஆறுதல் தெரிவித்தனா்.
பட விளக்கம் (2கேஜிபி1):
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் மழைநீா் சூழ்ந்து காணப்படும் போச்சம்பள்ளி காவல் நிலையம்.