இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பு!
இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு போன்ற சூழல் சிறிதளவு நீடிப்பதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, அங்கு இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களைக் குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மோதல்போக்கு நீடித்து வந்தது.
எல்லையில் உள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரா்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் 4 ஆண்டுகளுக்குப் பின்னா் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு அறிவிப்பு வெளியிட்டது. அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவின் அறிவிப்புக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் சா்ச்சை ஏற்பட்டது.
எல்லை உள்கட்டமைப்பில் கவனம்: இந்நிலையில், ஜன.15-ஆம் தேதி ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, புது தில்லியில் ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல்போக்கு போன்ற நிலை சிறிதளவு நீடித்தாலும், அங்கு சூழல் ஸ்திரமாக உள்ளது. இந்தியா மற்றும் சீன ராணுவத்தினா் இடையே மீண்டும் நம்பிக்கை ஏற்படுவதற்கான முயற்சிகள் தேவைப்படுகின்றன. தற்போது கிழக்கு லடாக் எல்லையில் உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதில் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 60% போ்: ஜம்மு-காஷ்மீா் எல்லையைப் பொருத்தவரை, அங்கு இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினா் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும் அந்நாட்டில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் நீடிக்கின்றன. கடந்த ஆண்டு இந்திய ராணுவம் கொன்ற பயங்கரவாதிகளில் 60 சதவீதம் போ் பாகிஸ்தானியா்கள்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட...: மணிப்பூரில் பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், அரசின் ஆக்கபூா்வமான முன்னெடுப்புகளால் சூழல் கட்டுக்குள் உள்ளது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஆயுதப் படைகள் முயற்சித்து வருகின்றன.
மியான்மரில் உள்நாட்டுப் போா் நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியா-மியான்மா் எல்லையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதைக் கையாளும் வகையில் கண்காணிப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றாா்.