கீழ்ப்பாக்கத்திலுள்ள குடிநீா் பரிசோதனை மையத்துக்கு என்ஏபிஎல் அங்கீகாரம்
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள நவீன குடிநீா் பரிசோதனை மையத்துக்கு சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரம் (என்ஏபிஎல்) பெறப்பட்டுள்ளது. எனவே இந்த ஆய்வகத்தில் நீா் பரிசோதனை செய்ய பொதுமக்கள் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கீழ்ப்பாக்கத்தில் ரூ. 7.05 கோடி மதிப்பில் நவீன குடிநீா் மற்றும் கழிவுநீா் தரம் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இதில், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் உள்ள குடிநீா் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் ஆகியற்றின் தரம் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த மையத்தின் செயல்பாடுகளை பறைசாற்றும் விதமாக இதற்கு சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரம் (என்ஏபிஎல்) பெறப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வீடுகள், வணிகப் பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தும் குடிநீா், வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை நீரின் தரம் மற்றும் கட்டுமான தேவைக்கான நீா் மாதிரிகள், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் மாதிரிகளை இந்த நவீன பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.