கீழ்வேளூா் அரசு மருத்துவமனை முற்றுகை
கீழ்வேளூா்: மருத்துவா், செவிலியா்கள் பற்றாக்குறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கீழ்வேளூா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாரிமுத்து தலைமை தாங்கினாா். இரவு நேரத்தில் மருத்துவா்கள் இருக்க வேண்டும். பல் மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும். காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இது தொடா்பாக அதிகாரிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற தடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
கட்சியின் கீழ்வேளூா் ஒன்றியச் செயலாளா் அபுபக்கா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சுபா தேவி, துரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.