'குகேஷ் பலவீனமானவர் - கார்ல்சன்; பதிலடி கொடுத்த குகேஷ்!'- கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!
'குகேஷ் வெற்றி...'
தமிழக வீரரும் உலக செஸ் சாம்பியனுமான குகேஷ் மீண்டும் ஒரு முறை உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் கார்ல்சனை வீழ்த்தியிருக்கிறார்.

குரோஷியாவின் சாக்ரெப்பில் நடந்து வரும் Super United Rapid and Blitz தொடரில் குகேஷூம் கார்ல்சனும் ஆடிய ஆட்டம் நேற்று நடந்திருந்தது. 'Rapid' வடிவில் நடந்த இந்தப் போட்டியில் 49 வது நகர்வில் கார்ல்சன் தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கார்ல்சன் குகேஷிடம் தோற்றிருக்கிறார். மே மாதத்தில் நார்வேயில் நடந்த க்ளாசிக்கல் வகை போட்டியிலும் குகேஷ் கார்ல்சனை தோற்கடித்திருந்தார்.

'குறைத்து மதிப்பிட்ட கார்ல்சன்!'
அதிக நேரம் வழங்கப்படும் க்ளாசிக்கல் வகை போட்டிகள்தான் குகேஷின் பலமான களமாக பார்க்கப்பட்டு வந்தது. குரோஷியாவில் நடந்தது குறுகிய வடிவ போட்டி. இந்தத் தொடருக்கு முன்பாக கார்ல்சனே குகேஷை குறைத்து மதிப்பிட்டிருந்தார். 'குகேஷ் இந்த வடிவ போட்டிகளில் தன்னை இன்னும் நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்தத் தொடரில் அவரை ஒரு பலவீனமான போட்டியாளராகத்தான் பார்ப்பேன்.' என தொடருக்கு முன்பாக கார்ல்சன் பேசியிருந்தார். ஆனால், அவர் பேசியதற்கு மாறாக முடிவுகள் வந்திருக்கிறது
'ஜாம்பவானின் வார்த்தைகள்!'
இந்தப் போட்டி நடந்துகொண்டிருந்த போது வர்ணனையில் ஜாம்பவனான கேரி கேஸ்பரோவ் பேசிக்கொண்டிருந்தார். குகேஷ் குறித்து பேசிய அவர், 'கார்ல்சனின் ஆதிக்கத்தை இப்போது நாம் கேள்வி கேட்கலாம். குகேஷிடம் கார்ல்சன் வெறுமென இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக தோற்றிருக்கிறார் என்று பார்க்க முடியாது. குகேஷ் இங்கே முழுமையாக சிறப்பாக செயல்பட்டு திறம்பட வென்றிருக்கிறார். இங்கே எந்த அதிசயமும் நடக்கவில்லை. இருவருக்கும் இடையே கடுமையான மோதல் இருந்தது. அதில் குகேஷ் வென்றுவிட்டார்.' எனக் கூறியிருந்தார்.

'குகேஷ் இப்போது மிகச்சிறப்பாக ஆடுகிறார். அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தத் தொடரில் அவர் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும். ஆனாலும் தொடர்ந்து 5 போட்டிகளை வெல்வது அத்தனை எளிதானதல்ல.' போட்டிக்கு முன்பு குகேஷை குறைத்து மதிப்பிட்டிருந்த கார்ல்சன், போட்டிக்குப் பிறகு இப்படி பேசியிருந்தார்.