குஜராத்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக ஏரியில் குதித்த வாலிபர்கள்; விபரீதத்தில் முடிந்த தற்கொலை நாடகம்
குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகில் உள்ள நர்திபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது விபரீதத்தில் முடிந்துள்ளது. தற்போது தசரா என்பதால் நள்ளிரவு வரை தாண்டியா நடனம் நடைபெறுவது வழக்கம்.
இரவு 10.30 மணிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த யாஷ் மாலி என்பவர் தாண்டியா பார்த்துக்கொண்டிருந்தபோது அவருடன் இருந்த நண்பருக்கு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வந்தது.

அந்த வீடியோவில் யாஷ் மாலியின் சகோதரர் உட்பட 3 வாலிபர்கள் அங்குள்ள ஏரியில் அமர்ந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வது தொடர்பாகப் பேசிக்கொண்ட காட்சி இடம் பெற்றிருந்தது.
அந்த நபர் யாஷ் மாலியிடம் அந்த வீடியோ குறித்துத் தெரிவித்தார். அந்த வீடியோவை யாஷ்மாலி பார்த்துவிட்டு உடனே அங்குள்ள ஏரிக்கு விரைந்து சென்றார்.

ஏரிக்கரையில் இரண்டு மொபைல் போன், காலனி, பர்ஸ், இரு சக்கர வாகன சாவி மற்றும் இரு சக்கர வாகனம் இருந்தது. உடனே அந்த ஏரியில் இரவோடு இரவாகத் தேடிப் பார்த்தபோது 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இறந்து கிடந்தனர். அவர்களது பெயர் முறையே தைரிய மாலி(21), கெளஷிக்(23), அசோக்(39) என்று தெரிய வந்தது.
அவர்களது மொபைல் போனில் இருந்து மூவரும் இன்ஸ்டாகிராம் வீடியோவிற்காக தற்கொலை வீடியோவைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஏரியில் குதிப்பதைத் தாங்களே வீடியோ எடுக்க முயன்றதாகத் தெரிகிறது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மூன்று பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோவிற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா அல்லது உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஏரியில் குதிக்கும் வீடியோவைப் பகிர்ந்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
அவர்கள் மூவரையும் வேறு யாராவது தற்கொலைக்குத் தூண்டினார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
வீடியோவில் 3 பேரும் தங்களது வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பேசிக்கொண்ட காட்சிப் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி இருக்கிறது.