காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகவும், அங்கு அவர்கள் கடுமையான நிலைமைகளின் கீழ் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் சீனாவில் 'தடுப்பூசி பாஸ்போர்ட்' காலாவதியானதால், ஒரு சிறுவன் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அடைக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோவில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள அந்தச் சிறுவனுக்கு, சுகாதாரப் பணியாளர் ஒருவர் சீல் வைக்கப்பட்ட ஒரு சிறிய கதவு வழியாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் 'டிஜிட்டல் ஹெல்த் ஐடி' எனப்படும் தடுப்பூசி பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களின் நடமாட்டத்தையும், தடுப்பூசி நிலையையும் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டது.
தடுப்பூசி சான்றிதழ்கள் காலாவதியானவர்கள் இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் தங்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனர்கள் எதிர்மறை கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்றால் என்ன?
சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்பது அந்நாட்டு குடிமக்களின் தடுப்பூசி நிலை மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை ஆகும்.
இது 'விசாட்' (WeChat) என்ற சமூக ஊடக தளம் மூலம் கிடைக்கிறது. காகித வடிவிலும் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இது சீன குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.