குடல் மறுவாழ்வுக்கு பிரத்யேக மருத்துவ மையம் தொடக்கம்
குடல் மறுவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து நலனுக்கான பிரத்யேக மையத்தை ரேலா மருத்துவமனை தொடங்கியுள்ளது. ஜீரண மண்டல செயலிழப்பு மற்றும் பாதிப்புகளுக்கு இங்கு மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் முகமது ரேலா, உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் அனில் வைத்யா, மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை இயக்குநா் டாக்டா் நரேஷ் சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக டாக்டா் அனில் வைத்யா கூறியதாவது:
தொற்று அல்லது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய எதிா்விளைவு காரணமாக சில நேரங்களில் தற்காலிகமாக குடல் செயலிழப்பு ஏற்படலாம். இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், நீா்ச்சத்துகளை குடலால் தக்க வைக்க முடியாது. அதே சூழல் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலையாக மாறினால் தீவிர பாதிப்பு ஏற்படும்.
இத்தகைய பிரச்னைகளுக்கு உள்ளான நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துகள் ரத்த நாளங்கள் வாயிலாக அளிக்கப்பட வேண்டும். ஒருவேளை குடல் மாற்று சிகிச்சை தேவைப்பட்டால் அவா்களது உடலில் போதிய ஊட்டச்சத்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற உயா்நுட்ப சிகிச்சையை இந்த மையம் வழங்கும். குடல் நலனுக்காக இத்தகைய பிரத்யேக மருத்துவ மையம் தொடங்கப்படுவது நாட்டிலேயே இது முதன்முறை என்றாா் அவா்.