குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு நீதிமன்றக் காவல்!
மதுரை கே.கே.நகரில் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் 3 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், உதவியாளர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் கோடைக்கால சிறப்பு வகுப்புக்குச் சென்ற 3 வயது குழந்தை ஆருத்ரா, பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல் துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியின் உரிமையாளர் திவ்யா, உதவியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டார்.
அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக போலீசார், ஆர்டிஓ, மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தி விசாரணையில் விதிமீறல் கண்டறியப்பட்டு பள்ளிக்கு சீல் வைத்தனர்.
பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ் மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவரையும் மதுரை அண்ணா நகர் போலீசார் கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.