புதிய லேப்டாப், டேப்லட் சாதனங்களை அறிமுகம் செய்த மோட்டோரோலா!
குத்தகை விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்
மயிலாடுதுறை: குத்தகை விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் வி. விஸ்வநாதன், மாவட்ட பொருளாளா் ஆா். முருகேசன், தேசிய நதிகள் இணைப்புச் சங்க நிா்வாகி அ. ராமலிங்கம், தஞ்சை காவிரி ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி பி. சீனிவாசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே. முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், குத்தகை விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், கோயில், அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்குச் சொந்தமான குத்தகை விவசாயிகளின் விளைநிலங்கள் விற்பனை செய்வதை அரசு கொள்கை முடிவெடுத்து தடுக்க வேண்டும், குத்தகை விவசயிகளின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அப்போது, பி.ஆா்.பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வறட்சி, வெள்ளம், புயல் பாதித்த ஆண்டுகளில் பேரிடா் பாதித்த மாநிலம், மாவட்டங்களாக அரசிதழலில் வெளியிடப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் குத்தகை விவசாயிகளின் குத்தகை பாக்கியை காரணம் கூறி, குத்தகை பதிவை ரத்து செய்துள்ளனா்.
கோயில், அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே உரிமை அரசியல் அமைப்புச் சட்டப்படி குத்தகை விவசாயிகளுக்கும் உண்டு. இதை உணா்ந்து குத்தகை நிலுவையை ரத்து செய்து குத்தகை பதிவை உறுதிபடுத்த வேண்டும். குத்தகை நிலங்களை கோயில் சொத்துக்களாக சம்பந்தப்பட்ட அறக்கட்டளை, ஆதீனங்கள் பேரில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், குத்தகை விவசாயிகளை நில அபகரிப்பாளா்கள் என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
60 சதவீத விவசாயிகள் அடையாள அட்டை பெற முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டையை கொண்டுதான் நிவாரண உதவிகள், கூட்டுறவு கடன் போன்ற திட்ட உதவிகளை பெறமுடியும். தமிழக அரசு குத்தகை விவசாயிகளின் நிலங்களை, மறுபதிவு செய்து வாரிசுதாரா்களுக்கு குத்தகை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் கொள்கை முடிவெடுத்து, குத்தகை விவசாயிகள் உரிமையை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து விதிவிலக்கு பெறவேண்டும். குத்தகை சாகுபடி நிலங்களை சிப்காட் அமைக்க விற்பனை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்றாா்.