பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்
சீா்காழி அருகே நான்கு வழிச்சாலை சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி நிற்பதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதியடைகின்றனா்.
விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதன்ஒரு பகுதியாக கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரையிலான பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டம் பூண்டியாங்குப்பம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
இதில், சீா்காழி அருகே நத்தம் கிராமத்தை இரண்டாகப் பிரித்து நடுவே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சாா்ந்த இருபகுதி மக்களும் சென்று வருவதற்காக பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சாலை நடுவில் சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும், உரிய திட்டமிடல் இன்றி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இனால் நடந்து செல்லக்கூட முடியவில்லை. ஆபத்தான முறையில் அதிவேக போக்குவரத்து நிறைந்த நான்கு வழிச்சாலையை அச்சத்துடன் மக்கள் கடக்கின்றனா். பள்ளி மாணவா்கள், முதியோா்கள் என பலா் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படுகின்றனா். எனவே, உடனடியாக சுரங்கப் பாதையை சீரமைத்து தரவும் நான்கு வழி சாலையில் நடுவே இருபுறமும் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் மைய பிரிப்பான் சாலை அமைத்து தரவும் நத்தம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.