நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!
`குரங்கு கையில் பூமாலையாக கிழக்கு மாவட்ட திமுக' - விமர்சித்த சுரேஷ்ராஜன்... குமரி சலசலப்பு!
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த டாக்டர் ஆல்பனின் 26-வது நினைவுநாள் பொதுக்கூட்டம் ஆற்றூர் பகுதியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ``எனக்கு முன்பாக பேசிய விஜிலா சத்யானந்த், கட்சிக்காரர்கள் எல்லாம் சிதறிக்கிடக்கிறார்கள் என்று சொன்னார்கள். மேற்கு பகுதியைப் பற்றி எனக்கு தெரியவில்லை. கிழக்கு பகுதியை பொறுத்தமட்டில் ஒரு குரங்கு கையில் மாலையை கொடுத்தால் பூக்கள் எப்படி சிதறிப்போகுமோ அதுமாதிரிதான் கிழக்கு பகுதி இருக்கிறது. இதை தலைமை உணரும் என்று நான் எதிரார்த்துக் கொண்டிருக்கிறேன்" என பேசினார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக இருக்கும் மேயர் மகேசுக்கும், முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனுக்கும் இடையே கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுரேஷ்ராஜன் பொது மேடையிலேயே இப்படி பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "முன்னாள் அமைச்சரான சுரேஷ்ராஜன் சுமார் 20 ஆண்டுகளாக தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தார். கிழக்கு, மேற்கு என கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார். ஆரம்பத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ் உடன் உச்சகட்ட மோதலில் ஈடுபட்டுவந்தார் சுரேஷ்ராஜன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் சொந்த கட்சி வேட்பாளரான மகேசுக்கு எதிராக உள்ளடி வேலைகள் செய்ததன் காரணமாக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் சுரேஷ்ராஜன். புதிய மாவட்டச் செயலாளராக மேயர் மகேஷ் நியமிக்கப்பட்டார். கிழக்கு மாவட்டச் செயலாளரான மேயர் மகேசுக்கும், மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மனோ தங்கராஜுக்கும் கருத்துவேறுபாடு இருந்துவருகிறது. இதையடுத்து சுரேஷ்ராஜன் மனோ தங்கராஜ் அணியில் செயல்பட்டுவருகிறார்.
தற்போது சுரேஷ்ராஜன் தி.மு.க தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன்மீது போடப்பட்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி அல்லது கட்சியின் முக்கிய பதவி எதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து உறவை புதுப்பித்துக்கொண்டார். ஆனாலும் அவருக்கு இதுவரை பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேசை அட்டாக் செய்வதாக நினைத்து, தி.மு.க தலைமையை விமர்சித்துள்ளார். அதிலும் மேற்கு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டம் குறித்து சுரேஷ்ராஜன் பேசியதுதான் விமர்சனத்துக்கு காரணம்" என்றார்.

டாக்டர் ஆல்பன் நினைவு நிகழ்ச்சியில் மேயர் மகேசும் கலந்துகொண்டு சுரேஷ்ராஜன் உள்ளிட்டவர்களின் பெயர்களை கூறி பேசிவிட்டு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றார். அதைத் தொடர்ந்தே சுரேஷ்ராஜன் விமர்சித்து பேசியுள்ளார். சுரேஷ்ராஜன் பேச்சு குறித்து தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேசிடம் பேசினோம். "கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் அனைவருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளை ஒருங்கிணைத்து பணிசெய்துவருகிறேன். சுரேஷ்ராஜன் பேசியது குறித்து நான் பதில்கூற விரும்பவில்லை. அதேசமயம் அவர் பேசிய வீடியோ குறித்து தலைமையின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன்" என்றார்.
இதுபற்றி முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் விளக்கம் கேட்டு பேசினோம், "வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது நம் தலைவரின் எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும். கிழக்கு மாவட்டத்தில் சிலர் பிரிந்து இருக்கிறார்கள். பொறுப்பு இல்லை என்று யாரும் ஒதுங்கி இருக்காதீர்கள். பிரிந்து இருப்பவர்கள் எல்லோரும் தேர்தலில் ஒன்றாக இருக்க வேண்டும். தி.மு.க குடும்பத்தில் நாம் ஒன்றாக இருந்து தேர்தல் வேலையை பார்க்க வேண்டும் எனபதற்கு எடுத்துக்காட்டுக்காக அந்த வார்த்தையை நான் சொன்னேன். எதிராளிகள் வேண்டும் என்றே அதை திசைதிருப்புகிறார்கள்" என்றார்.