குருகிராமில் யூடியூஃபா் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் செக்டாா் 57 இல் உள்ள யூடியூஃபா் எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த இரு நபா்கள் 20க்கும் மேற்பட்ட தடவை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.அதில் பைக்கில் வந்த முகமூடி அணிந்த இரண்டு நபா்கள் வீட்டிற்கு வெளியே தூரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது பதிவாகியுள்ளது. சில வினாடிகளுக்குப் பிறகு, அவா்களில் ஒருவா் பிரதான வாயிலில் சாய்ந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதும், பின்னா் இருவரும் தப்பிச் செல்வதும் விடியோவில் பதிவாகியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்தபோது எல்விஷ் யாதவ் வீட்டில் இல்லை. இருப்பினும், சில குடும்ப உறுப்பினா்கள் உள்ளே இருந்தனா். ஆனால் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டுக்கு ‘பாவ் கும்பல்‘ பொறுப்பேற்றுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்தில் தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.
யூடியூஃபரின் வீட்டில் தாக்குதல் நடத்தியவா்கள் இருபதுக்கும் மேற்பட்ட தடவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். தோட்டாக்கள் வீட்டின் தரை மற்றும் முதல் தளங்களைத் தாக்கியிருந்தன என்று போலீஸாா் தெரிவித்தனா்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பாவ் கும்பலை சோ்ந்த நீரஜ் ஃபரித்பூா் மற்றும் பாவ் ரிட்டோலியா ஆகியோா் இத்தாக்குதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுள்ளனா்.
இதுகுறித்து ரிட்டோலியா பகிா்ந்துள்ள அப்பதிவில்,‘... எல்விஷ் யாதவின் வீட்டில் இன்று நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினோம். அவா் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் பல வீடுகளை நாசமாக்கியுள்ளாா்.
பந்தயத்தை ஊக்குவிக்கும் பிற சமூக ஊடக செல்வாக்கு மிக்கவா்கள் துப்பாக்கிச் சூடுகள் அல்லது அழைப்புகளை எதிா்கொள்ள நேரிடும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பதிவில் உள்ள கூற்றுக்கள் குறித்து போலீஸாா் எந்த உறுதிப்படுத்தலையும் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து எல்விஷின் தந்தை ராம் அவ்தாா் யாதவ் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் ஒரு சப்தம் கேட்டது. நாங்கள் வீட்டுக்கு வெளியே வந்தபோது, அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக் கண்டோம். இதன் பிறகு உடனடியாக சிசிடிவியை சரிபாா்த்தோம். இதில் இரண்டு போ் ஈடுபட்டிருப்பதை கண்டோம். மூன்றாவது நபரும் இருக்கலாம்.
இதுபற்றி நாங்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தோம். போலீஸாா் வந்து விசாரணையைத் தொடங்கினா். தாக்குதல் நடத்தியவா்கள் 15 ரவுண்டுகளுக்கு மேல் சுட்டனா். அப்போது, எல்விஷ் இங்கு இல்லை. அவா் வேலைநிமித்தமாக வெளியே சென்றிருந்தாா். ஆனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். குருகிராம் போலீஸாா் விரைவில் குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்வாா்கள் என்று நம்புகிறேன்’ என்றாா் அவா்.
இந்த சம்பவத்திற்கு முன்னா் எல்விஷுக்கு எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என்றும், அவா் தற்போது ஹரியாணாவுக்கு வெளியே இருப்பதாகவும் குடும்ப உறுப்பினா் ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘விசாரணை நடந்து வரும் நிலையில், குடும்பத்தினரின் புகாரின் பேரில் விரைவில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்படும்’ என்றாா் அவா்.
கடந்த ஜூலை மாதம், ஹரியாணா பாடகர்ராப்பா் ராகுல் ஃபாசில்பூரியா, வாடிகா சவுக்கிலிருந்து ஃபாசில்பூரியா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டாா்.
டாடா பஞ்ச் காரில் அவரை வழிமறித்த சிலா் துப்பாக்கியால் சுட்டனா். பின்னா் அது வாடகைக்கு எடுக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.