மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு
குளிா்கால கூட்டத் தொடரில் வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: பட்டியலிட்டது மத்திய அரசு
எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இதில், தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வழிவகுக்கும் மசோதா உள்பட 5 மசோதாக்கள் புதியவை. இந்த மசோதாக்கள், அறிமுகம்-பரிசீலனை-நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
வக்ஃப் திருத்த மசோதா உள்பட பிற மசோதாக்கள் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் இருப்பவையாகும். இவை, பரீசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக கொண்டுவரப்படவுள்ளன.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நவ. 25-ஆம் தேதி தொடங்கி டிச. 20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், 16 மசோதாக்கள் மட்டுமன்றி, 2024-25-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட துணை மானிய கோரிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
முன்னதாக, வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் இது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இக்குழுவின் அறிக்கை, குளிா்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்துக்குள் தாக்கலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக வக்ஃப் திருத்த மசோதா கொண்டுவரப்படும்.
தொழிலதிபா் கெளதம் அதானி மீதான அமெரிக்க அரசுத் தரப்பின் குற்றச்சாட்டுகள், நாட்டில் அரசியல்ரீதியில் புயலைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரம், குளிா்கால கூட்டத் தொடரில் பெரிய அளவில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.